திமுக அரசின் நான்கு ஆண்டுகால கொடுங்கோல் ஆட்சி; போராட்டக் களமாக மாறிய தமிழகமே சாட்சி! டிடிவி தினகரன் பரபரப்பு அறிக்கை! - Seithipunal
Seithipunal


ஊழல் புகார்களிலும், முறைகேடுகளிலும் சாதனை படைத்த திமுக அரசுக்கு, 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நிரந்தர முற்றுப்புள்ளி வைத்து தமிழக மக்கள் சரித்திரமிக்க சாதனையை படைப்பார்கள் என்பது மாத்திரம் உறுதி என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவர் விடுத்துள்ள அறிக்கையில், "செய்யக் கூடாதவற்றை செய்தாலும், செய்ய வேண்டியவற்றை செய்யாமல் இருந்தாலும் கேடு ஏற்படும் என்ற வள்ளுவப் பெருந்தகையின் கூற்றுக்கு திமுக அரசின் நான்காண்டு மக்கள் விரோத கொடுங்கோல் ஆட்சி மிகச்சிறந்த உதாரணமாக அமைந்திருக்கிறது.

பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் உயிர்மூச்சாக இருந்தது கடமை, கண்ணியம், கட்டுப்பாடு. ஆனால் அதற்கு நேர் எதிராக செயல்பட்டு தமிழக அரசு நிர்வாகத்தின் அடிப்படையில் தொடங்கி அமைச்சர்கள் வரை ஊழல் மற்றும் முறைகேடு புகார்களில் சிக்கி நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு உள்ளாகி தங்களின் பதவி இழந்ததுதான் திமுக அரசின் முதல் சாதனை.

தாலிக்குத் தங்கம், தொட்டில் குழந்தை திட்டம், விலையில்லா மடிக்கணினி, விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டம், அம்மா மருந்தகம் என மக்கள் நலனுக்காக இதயதெய்வம் அம்மா அவர்கள் தொலைநோக்கு சிந்தனையோடு தொடங்கிய திட்டங்கள் அனைத்தையும் திட்டமிட்டு முடக்கியது தான் திமுக அரசின் இரண்டாவது சாதனை.

தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள், போதைப் பொருட்களின் தாராளப் புழக்கம், சட்டவிரோத மதுவிற்பனை என குற்றச்சம்பவங்கள் நிறைந்து தமிழகத்தில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா? சமூக விரோத ஆட்சியா? என் கேட்கும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்திருப்பது திமுக ஆட்சியின் மூன்றாவது சாதனை.

வீட்டில் தனியாக இருக்கும் முதியவர்கள் தொடங்கி மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தக் கூடிய அரசு அதிகாரிகள், கனிமவளக் கொள்ளையை வெளிக்கொண்டு வந்த சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என அடுத்தடுத்து அரங்கேறும் கொலைச் சம்பவங்களுக்கு திரையுலகமே அதிரும் வகையில் அடுக்கடுக்கான கதைகளையும், காரணங்களையும் கூறி மக்களை ஏமாற்ற முயற்சிப்பது திமுக ஆட்சியின் நான்காவது சாதனை.

ஆட்சிக்கு வந்தவுடன் அரசு நிர்வாகத்தின் மீதான கடன் சுமையை குறைப்பதாக கூறி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட பொருளாதார வல்லுநர்கள் குழுவால் எந்தவித பயனுமின்றி இந்தியாவிலேயே அதிக கடன் பெறும் மாநிலங்களில் முதலிடத்தை தமிழகத்திற்கு பெற்றுத்தந்தது திமுக அரசின் ஐந்தாவது சாதனை.

பால்விலை உயர்வில் தொடங்கி தொழில்வரி, சொத்துவரி, மின் கட்டணம் என வரிகளையும், கட்டணங்களையும் பன்மடங்கு உயர்த்தி ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் பாதிப்பை சந்தித்துவரும் ஏழை, எளிய, சாமானிய மக்களின் மீது தாங்க முடியாத அளவிற்கு பொருளாதார சுமையை ஏற்றிய நிர்வாகத் திறமையின்மை தான் திமுக ஆட்சியின் ஆறாவது சாதனை

காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டத் துடிக்கும் கர்நாடக அரசையும், முல்லைப் பெரியாற்றில் புதிய அணையை கட்டியேத் தீருவோம் என பிடிவாதம் பிடிக்கும் கேரள அரசையும் கண்டிக்கத் தவறி கூட்டணி தர்மத்திற்காக மாநிலத்தின் உரிமையை அடகுவைத்ததோடு, விடியல் ஆட்சி எனும் பெயரில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் அடியோடு பறித்தது தான் திமுக ஆட்சியின் ஏழாவது சாதனை.

சாதாரண பொதுமக்கள் தொடங்கி ஆசிரியர்கள், விவசாயிகள், அரசு ஊழியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், போக்குவரத்து ஊழியர்கள், மின்வாரிய பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள், நெசவாளர்கள் மற்றும் தொழில்துறையினர் என அனைத்து தரப்பினரின் கோரிக்கைகளையும் ஏற்க மறுத்து ஒட்டுமொத்த தமிழகத்தையும் போராட்டக்களமாக மாற்றியது திமுக ஆட்சியின் எட்டாவது சாதனை.

நீட் தேர்வு ரத்து, கல்விக்கடன் தள்ளுபடி, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம், 3.5 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும், நூறு நாள் வேலைத்திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும், மாதம் தோறும் மின்சாரம் கணக்கிடும் முறை, விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின் இணைப்பு, சமையல் எரிவாயு சிலிண்டருக்கு நூறு ரூபாய் மானியம் என தேர்தலுக்கு முன்பாக வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றாமலே நான்கு ஆண்டுகளை நிறைவு செய்திருப்பது திமுக ஆட்சியின் ஒன்பதாவது சாதனை.

மீன்பிடி தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டு கடலுக்குச் செல்லும் தமிழக மீனவர்கள் ஒருபுறம் இலங்கை கடற்படையாலும், மறுபுறம் கடற்கொள்ளையர்களாலும் நாள்தோறும் இன்னல்களுக்குள்ளாகி வரும் நிலையில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதோடு தன் கடமை நிறைவடைந்து விட்டதாக கருதும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் மீனவர்கள் மீதான அக்கறையின்மை திமுக ஆட்சியின் பத்தாவது சாதனை.

மக்கள் மத்தியில் அரசு நிர்வாகத்தின் மீது எழுந்திருக்கும் அதிருப்தியை திசைதிருப்ப சட்டமன்றத்தில் கச்சத்தீவு மீட்பு தீர்மானம், தொகுதி மறுசீரமைப்புக் கூட்டம் என நாடகமாடியதோடு, குடும்பத்தின் வருமானத்தை பெருக்க விண்வெளித் தொழில் கொள்கையை உருவாக்கி ஒட்டுமொத்த தமிழகத்தையும் தன் குடும்பச் சொத்தாக கருதி பயன்படுத்திக் கொண்டிருப்பது திமுக ஆட்சி நிர்வாகத்தின் சாதனையோ சாதனை.

இப்படி தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும் கடந்த நான்கு ஆண்டுகளில் திமுக இழைத்த துரோகங்களை பட்டியலிட்டால் அதற்கு முடிவே கிடைக்காது. ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது மக்களின் விருப்பத்திற்கும் எதிர்ப்பார்ப்புக்கும் திமுக அரசின் செயல்பாடுகளுக்கும் துளியளவும் சம்பந்தமில்லை என்பது உறுதியாகியுள்ளது. ஊழல் புகார்களிலும், முறைகேடுகளிலும் சாதனை படைத்த திமுக அரசுக்கு 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நிரந்தர முற்றுப்புள்ளி வைத்து தமிழக மக்கள் சரித்திரமிக்க சாதனையை படைப்பார்கள் என்பது மாத்திரம் உறுதி" என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TTV Dhinakaran Condemn to DMK MK Stalin Govt


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->