''பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட செலவை விட, தவெக அரசின் விளம்பரங்களுக்கான செலவுதான் அதிகம்''; டிடிவி தினகரன் குற்றச்சாட்டு..! - Seithipunal
Seithipunal


''பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்ட இரண்டாவது நாளிலேயே மாணவர்களுக்கு வழங்கப்பட்ட காலை உணவில் பல்லி விழுந்திருப்பது, அரசுப் பள்ளிகளின் சமையலறைகளில் நிலவும் சுகாதாரச் சீர்கேட்டை வெளிச்சம் போட்டுக் காட்டுவதோடு, மாணவர்களின் உயிர் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.''என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளதாவது;

''திருவள்ளூர் மாவட்டம் கொட்டையூர் அரசுப் பள்ளியில் பல்லி விழுந்த காலை உணவை அருந்திய 36 மாணவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.

கடந்த சில தினங்களுக்கு முன்பு செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள மேலக்கண்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பல்லி விழுந்த உணவைச் சாப்பிட்ட 11 மாணவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அதேபோன்ற சம்பவம் அரங்கேறியிருப்பது அரசின் அலட்சியப் போக்கையே வெளிப்படுத்துகிறது.

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்ட இரண்டாவது நாளிலேயே மாணவர்களுக்கு வழங்கப்பட்ட காலை உணவில் பல்லி விழுந்திருப்பது, அரசுப் பள்ளிகளின் சமையலறைகளில் நிலவும் சுகாதாரச் சீர்கேட்டை வெளிச்சம் போட்டுக் காட்டுவதோடு, மாணவர்களின் உயிர் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களின் பசியைப் போக்க வழங்கப்படும் காலை உணவு, தவெக அரசின் அலட்சியப் போக்காலும் அதீத விளம்பர மோகத்தாலும், மாணவர்களின் உடல்நலத்திற்கும் உயிருக்கும் கேடு விளைவிக்கும் நஞ்சாக மாறியிருப்பதாக பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களும் உறவினர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.

பழுதடைந்த நிலையில் உள்ள பள்ளிக் கட்டடங்கள், பாதுகாப்பற்ற முறையில் இயங்கி வரும் சமையல்கூடங்கள், பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள கழிவறைகள் என அரசுப் பள்ளிகளின் அவலநிலைகள் தொடர்கின்றன.

ஆனால், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரோ தேவையற்ற கதைகளையும் அடுக்குமொழி வசனங்களையும் பேசி வருவது, அவர் இன்னும் பட்டிமன்ற மேடையை விட்டு வெளியே வரவில்லையோ என்ற கேள்வியை எழுப்புகிறது.

மேலும், கடந்த 22-ம் தேதி முதலல்வர் விஜய்யால் விரிவாக்கம் செய்யப்பட்ட பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட செலவை விட, அந்தத் திட்டத்தை விளம்பரப்படுத்துவதற்காக பல்வேறு மாநிலங்களில், பல்வேறு மொழிகளில் நாளிதழ்களின் முதல் பக்கங்களில் வெளியிடப்பட்ட விளம்பரங்களுக்கான செலவுதான் அதிகம் என்ற எழுந்திருக்கும் விமர்சனத்துக்கு தவெக அரசு என்ன பதில் சொல்லப் போகிறது?

எனவே, பல்லி விழுந்த உணவை அருந்தி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்குவதோடு, தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு தரப் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தவெக அரசையும், அதன் முதல்வர் விஜய்யையும் வலியுறுத்துகிறேன்.'' எனத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TTV Dhinakaran alleges that the expenditure on advertisements exceeds the funds allocated for the Kamarajar Breakfast Scheme


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->