தமிழக இடைத்தேர்தல்; தொழுப்பேடு பகுதியில் முதல்வர் விஜய் நாளை பிரச்சாரம்; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!
CM Vijay to campaign tomorrow in the Thozhupedu area in support of Maragatham Kumaravel
தமிழகத்தில் காலியாவுள்ள 07 தொகுதிகளில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் அக்டோபர் 06 -ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளன. இந்த சட்டப்பேரவை இடைத்தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளன.
இந்நிலையில், மதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு ஆதரவாக தமிழக முதல்வர் விஜய் நாளை (செப்.25) தொழுப்பேடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட பிரச்சார மேடையில் பங்கேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபடவுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டப்பேரவை தொகுதியின் இடைத்தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து, பல்வேறு அமைச்சர்கள் தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக முதல்வர் விஜய் நாளை தவெக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பதற்காக தொழுப்பேடு பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபடவுள்ளார். இதற்காக, அப்பகுதியில் சுமார் 45 ஏக்கர் பரப்பளவில் பிரச்சாரக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில், 30 ஏக்கர் இடம் வாகன நிறுத்தத்துக்கும், மீதமுள்ள இடம் தொகுதிக்குட்பட்ட மக்கள் நாற்காளியில் அமர்ந்து பிரச்சாரத்தை பார்ப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் நாளை மாலை 04 மணியிலிருந்து 07 மணி வரையில் பொதுக்கூட்ட பிரச்சார மேடையில் பேசவுள்ளார். இதனால் அப்பகுதியில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அத்துடன், திருச்சி - சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்படாமல் இருப்பதற்காக, போலீஸார் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு மாற்று ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மு.வீரப்பன் தெரிவித்துள்ளார்.
English Summary
CM Vijay to campaign tomorrow in the Thozhupedu area in support of Maragatham Kumaravel