‘பொறுத்தார் பூமி ஆள்வார்’..நான் எந்த பூமியை ஆளப் போகிறேன்னு எனக்கே தெரியாது!” – பாஜக பதவி குறித்து சரத்குமார் பரபரப்பு பேச்சு
Those who have patience shall rule the earth I myself donot know which earth I am going to rule Sarathkumar sensational remarks regarding a BJP post
பாஜகவில் இணைந்து இரண்டரை ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், தனக்கு இன்னும் முக்கியப் பொறுப்பு வழங்கப்படாதது குறித்து நடிகரும் பாஜக நிர்வாகியுமான சரத்குமார் வெளிப்படையாக பேசியுள்ளார். அதே நேரத்தில், அண்ணாமலை போன்று புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கும் எண்ணம் தனக்கு இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், “சமத்துவ மக்கள் கட்சியை மீண்டும் ஆரம்பிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. என்னைப் பொறுத்தவரை பாஜகவில் இணைந்து இரண்டரை வருடங்கள் ஆகிவிட்டது. எனக்கு பொறுப்பு இருக்கிறதோ, இல்லையோ, என்னுடன் பயணிப்பவர்களுக்கு பொறுப்பு வாங்கிக் கொடுத்துள்ளேன்.
‘பொறுத்தார் பூமி ஆள்வார்’ என்று சொல்கிறோம். எந்த பூமியை ஆளப் போகிறேன் என்று எனக்கே தெரியாது. எது எப்போது நடக்கும் என்றும் தெரியாது. நான் பொறுமையாகக் காத்துக்கொண்டிருக்கிறேன். என்னுடைய செயல், அறிவு, ஆற்றல், திறமை எல்லாமே அவர்களுக்குத் தெரியும். அதை பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இருந்தாலும், அது காலதாமதமாகிறது. அது விரைவில் நடக்கும் என்று எதிர்பார்க்கிறேன். நடக்கவில்லை என்றால் அது குறித்து கேள்வி கேட்கலாம்” என்று கூறினார்.
இதையடுத்து, “அண்ணாமலை போன்று நீங்களும் புதிய இயக்கம் தொடங்க வாய்ப்பு இருக்கிறதா?” என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த சரத்குமார், “அண்ணாமலை இயக்கம் ஆரம்பித்தது எனக்குத் தெரியாது. பொதுநல சேவையை எல்லோரும் செய்து கொண்டுதான் இருக்கிறோம். கடற்கரையோரம் குப்பைகளை அகற்ற வேண்டும் என்று கூறியிருக்கிறேன். தென்காசி தொகுதியில் எனது சொந்தப் பணத்தில் பூங்கா அமைத்துக் கொடுத்திருக்கிறேன். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைப்பவன் நான். இன்னும் வாய்ப்பு வராமல் இருக்கலாம். வாய்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். வாய்ப்பு வரலாம். எது எப்போது நடக்கும் என்று இந்த உலகத்தில் யாருக்கும் தெரியாது” என்றார்.
மேலும், தமிழக வெற்றிக் கழக அரசின் பட்ஜெட் குறித்து கேட்கப்பட்டபோது, அதை தான் முழுமையாக பார்க்கவில்லை என்றும், ஒரு பொறுப்பு வழங்கப்பட்ட பிறகு அது குறித்து தீவிரமாக கருத்து தெரிவிக்க விரும்புவதாகவும் சரத்குமார் கூறினார்.
“பேப்பர் பார்த்தபோது எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்தது. அந்த எதிர்பார்ப்புகள் இல்லை என்று மட்டும் என்னால் சொல்ல முடியும்” என்றும் அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, 2021ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் கூட்டணிக் கட்சிகளை அரவணைக்காதது அக்கட்சியின் தோல்விக்கு காரணமாக இருந்ததாக நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் கூறியிருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு பதிலளித்த சரத்குமார், 1996ஆம் ஆண்டு ஏற்பட்ட அரசியல் சூழலை நினைவுகூர்ந்தார்.
“1996-ல் ரஜினி, நான், மூப்பனார் உள்ளிட்டோர் ஒரு மாற்றம் வர வேண்டும் என்று நினைத்தோம். பின்னர் திமுகவுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் என்று கூறியபோது, நான் 40 நாட்கள் பயணம் செய்தேன். அப்போது நினைத்திருந்தால் கட்சி ஆரம்பித்திருக்கலாம். அப்படி ஆரம்பித்திருந்தால் 30, 40 சீட்கள் கேட்டு, ஒரு இடத்திலாவது வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், அப்போது எனக்கு அந்த எண்ணமே இல்லை.
என்னுடைய அறிவு, ஆற்றல், திறமை புரட்சித் தலைவருக்கு தெரியும். 1996-ல் அவருக்கு எதிராக பிரசாரம் செய்த எனக்கு, நான் கட்சி தொடங்கிய பிறகு இரண்டு இடங்கள் கொடுத்து போட்டியிடுங்கள் என்று கூறினார்கள். எந்த அளவுக்கு என்னுடைய மதிப்பும், அறிவும், ஆற்றலும் போற்றப்பட்டிருக்கிறது என்பதை அதிலிருந்து உணர முடியும்” என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.
பாஜகவில் இணைந்து இரண்டரை ஆண்டுகள் கடந்தும் தனக்கு முக்கியப் பொறுப்பு வழங்கப்படவில்லை என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ள சரத்குமாரின் இந்தப் பேச்சு, தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போது கவனம் பெற்றுள்ளது.
English Summary
Those who have patience shall rule the earth I myself donot know which earth I am going to rule Sarathkumar sensational remarks regarding a BJP post