திமுக அரசின் கையாலாகாத்தனமே இந்தளவில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது - சீமான் கொந்தளிப்பு!
thiruparankundram Seeman DMK NTK
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளார் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருப்பரங்குன்றம் மலையைச் சிக்கலாக்கி, மதுரையை இன்னொரு அயோத்தியாக்கும் சதிச்செயல்களுக்கு நீதித்துறையே துணைபோவதா? மதவாதிகளின் பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடிக்க தமிழர் எனும் இனஉணர்வோடு மண்ணின் மக்கள் ஓர்மைப்படுவோம்!
மதுரையிலுள்ள திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவதை முன்வைத்துக் கலவரத்தை தூண்ட முயலும் மதவாத கும்பல்களின் பிரித்தாளும் அரசியல் வன்மையான கண்டனத்துக்குரியது. ஏற்கனவே, திருப்பரங்குன்றம் மலையில் வழிபாடு சிக்கலாகவும், அரசியலாகவும் ஆக்கப்பட்டுவிட்ட நிலையில், இதுநாள்வரை பின்பற்றாத ஒரு நடைமுறையைச் சட்டத்தின் வாயிலாகப் புகுத்தி, தர்காவுக்கு அருகாமையில் தீபமேற்ற அனுமதிப்பது தேவையற்ற பிரிவினைகளுக்கே வழிவகுக்கும். இராமஜென்ம பூமியை வழிபடத்தான் போகிறோமென உச்ச நீதிமன்றத்தில் கூறிய இதே மதவாத கும்பல், பாபர் மசூதியை அயோத்தியில் என்ன செய்தது என்பதை நாடறியும். அதுபோல, மதுரை மண்ணை இன்னொரு அயோத்தியாக மாற்றும் சூழ்ச்சிக்கு நீதித்துறையே துணைநிற்பது வெட்கக்கேடானதாகும்.
சமூக அமைதியை சீர்கெடுக்கும் நோக்கோடு செய்யப்படும் இத்தகைய சதிச்செயல்கள் ஒருபோதும் ஏற்புடையதல்ல. மதம் கடந்த ஒற்றுமையைப் போற்றிக் காத்து வரும் மகத்துவம் மிகுந்த மதுரை மண்ணில் மதமோதலை உருவாக்குவதற்காகக் குறிவைத்து நடத்தப்படும் இந்துத்துவ அமைப்புகளின் மதவாத அரசியல் செயல்பாடுகள் யாவும் தொடக்கத்திலேயே முறியடிக்கப்பட வேண்டியதாகும்.
முப்பாட்டன் முருகன் திருக்கோயில் அமைந்துள்ள மலை உச்சியின் இடதுபுறத்தில் சிவன் கோயிலும், மறுபுறம் சுல்தான் பாதுஷா சிக்கந்தர் அவுலியா தர்காவும் அமைந்துள்ளன. பல நூறு ஆண்டுகளாக இருக்கக்கூடிய இந்த வழிபாட்டுத்தலங்களால் எந்தச் சமயத்தவரிடையேயும் எந்த மோதலும் இதுவரை நிகழ்ந்ததில்லை. 'உன் மதம் சிறந்ததென்றால் வழிபடு! என் மதமும் சிறந்ததது; வழிவிடு' எனும் மதநல்லிணக்கக் கோட்பாட்டைப் பின்பற்றி, ஒருதாய் வயிற்றுப்பிள்ளைகளாகச் சமத்துவத்தோடும், சகோதரத்துவத்தோடும் மதுரை மண்ணின் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
திருப்பரங்குன்றம் மலையில் இருக்கும் சிக்கந்தர் தர்காவைக் குறிவைத்து, 'சிக்கந்தர் மலை' எனப் புதிய பெயரைப் புனைந்து, இசுலாமியர்கள் மலையை ஆக்கிரமிக்க முயல்வதாக அவதூறைப் பரப்பி, மதவுணர்வுகளைத் தூண்டக்கூடிய வேலையை இந்துத்துவ அமைப்புகள் செய்வது மிக ஆபத்தான அரசியலாகும். சிக்கந்தர் மலை என எந்த இசுலாமிய இயக்கமும் கூறாத சொல்லாடலை வலியத் திணித்து, திருப்பரங்குன்றம் மலைக்காகப் போராடுவதாகக் கூறும் பெருமக்களே! 'குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்' என்று கூறும் நிலையில், தமிழ்நாட்டிலுள்ள மலைகள் எல்லாம் வேட்டையாடப்பட்டு, கனிமவளங்களாக அண்டை மாநிலங்களுக்கு அள்ளிச் செல்லப்படும்போது எங்கே போனீர்கள்? அப்போதெல்லாம் முருகன் மீதான உங்கள் இறைப்பற்று எங்கே போனது? தமிழ் வழிவந்த முப்பாட்டன் முருகப் பெருமானுக்கு பல நூறு கோயில்களில் குடமுழுக்கும், வழிபாடும் செய்யக்கூட வழியற்ற நிலை தாய்த்தமிழ்நாட்டில் இருக்கிறதே? அதற்கெதிராக ஒருநாளும் நீங்கள் வீதிக்கு வந்து போராடியதில்லையே ஏன்? வாக்குவேட்டைக்காக சமூக அமைதியைக் கெடுக்க முயல்வதுதான் உங்களது ஆன்மீகப்பற்றா? வழிபாட்டுணர்வா? பேரவலம்!
சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி பலியிட்டு வழிபடும் முறை இசுலாமியச் சொந்தங்களிடையே பல நூறு ஆண்டுகளாக இருந்து வருகிறது. அதனைச் சிக்கலாக்கி, அரசியல் ஆதாயம் தேட முற்படும் இந்துத்துவ அமைப்புகளின் செயல்பாடுகளை உரிய நேரத்தில் கட்டுப்படுத்தத்தவறிய திமுக அரசு, 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சிக்கந்தர் தர்காவில் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடச் சென்ற அபுதாஹீரைத் தடுத்து நிறுத்தி, அனுமதி மறுத்த காவலர்கள் மீது துறைசார்ந்து நடவடிக்கை எடுத்து, அங்கு பல ஆண்டுகளாக ஆடு, கோழி பலியிட்டு வழிபாடு செய்யும் முறை இருக்கிறதென்பதை அரசுத்தரப்பு மக்களுக்கு எடுத்துரைத்திருந்தால் மதவெறியர்களின் அரசியல் சூழ்ச்சிகள் நடந்தேறியிருக்குமா? தும்பை விட்டுவிட்டு இப்போது வாலைப் பிடிக்கிற வேலையைச் செய்கிறது ஆளும் திமுக அரசு. 'இந்துக்களின் விரோதி' என மதவாதிகள் செய்யும் அரசியல் பரப்புரைக்குப் பயந்து, சமரசம் செய்துகொள்ளும் திமுக அரசின் கையாலாகாத்தனமே இந்தளவில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
thiruparankundram Seeman DMK NTK