'கேஎன் பாஷா ஆணையத்தின்' பரிந்துரைகளை பெற்று ஆணவப் படுகொலைகளை தடுக்க உடனடியாக சட்டம் இயற்ற வேண்டும்; திருமாவளவன்..!
Thirumavalavan urges the immediate enactment of a law to prevent honor killings based on the recommendations of the KN Basha Commission
''சாதி ஆணவப்படுகொலைகளைத் தடுப்பதற்கு ஏதுவாக ஒரு சட்டம் இயற்ற வேண்டும் என்பது விடுதலைச் சிறுத்தைகளின் நீண்டநாள் கோரிக்கையாகும். தற்போதைய தவெக அரசு 'கேஎன் பாஷா ஆணையத்தின்' பரிந்துரைகளைப் பெற்று ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கான சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும்'' என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
''திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி கிராமத்தைச் சார்ந்த ராமலட்சுமி என்பவர் தலித் சமூகத்தைச் சார்ந்த இளைஞரைக் காதலித்ததால், அவரை அவரது தம்பி முத்துக்கிருஷ்ணன் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்திருக்கிறார். அதனையொட்டி கொலையாளி முத்துக்கிருஷ்ணனை காவல்துறையினர் உடனடியாக கைது செய்துள்ளனர்.

அதேபோல, தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே மயிலோடை கிராமத்தைச் சார்ந்த அபி செல்வி என்பவர் ஒரு தலித் இளைஞரைக் காதலித்தார் என்பதால், அவரது அண்ணன் சிவஞானம், அம்மா எஸ்தர் பாலின் மற்றும் அவரது உறவினர் சங்கரலிங்கம் ஆகியோர் அவருக்கு நஞ்சு கொடுத்தும் கடுமையாகத் தாக்கியும் படுகொலை செய்துள்ளனர். ஆனால், அபிசெல்வி தற்கொலை செய்துகொண்டார் என நாடகமாடியுள்ளனர்.
பின்னர், விசாரணையில் 'இது தற்கொலையல்ல; கொலை' என உடற் கூராய்வு அறிக்கை' அம்பலப்படுத்தியுள்ளது. அதனடிப்படையில், அவரது தாயார் எஸ்தர் பாலின் மற்றும் சிவஞானத்தை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காவல்துறையினரின் விரைவான நடவடிக்கை ஆறுதல் அளிக்கிறது. தமிழ்நாட்டில் குறிப்பாக, தென்மாவட்டங்களில் தொடர்ந்து ஆணவப் படுகொலைகள் அதிகரித்து வருவது மிகுந்த வேதனையளிக்கிறது.

இத்தகைய சாதி ஆணவப்படுகொலைகளைத் தடுப்பதற்கு ஏதுவாக ஒரு சட்டம் இயற்ற வேண்டும் என்பது விடுதலைச் சிறுத்தைகளின் நீண்டநாள் கோரிக்கையாகும். ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கான சட்டத்தை இயற்றிட வேண்டும் என ஒன்றிய - மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் பலமுறை அறிவுறுத்தியுள்ளது. ஆனால், அந்த வழிகாட்டுதலை இந்திய ஒன்றிய அரசும் பெரும்பாலான மாநில அரசுகளும் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை என்பது கவலையளிப்பதாகும்.
இந்தியாவிலேயே முதன்முறையாக 2019 ஆண்டு, ராஜஸ்தான் அரசு ஆணவக் கொலைகளுக்கு எதிராக ஒரு சட்டத்தை இயற்றியது. அடுத்து, கர்நாடகாவில் கடந்த ஏப்ரல் மாதம் ஆணவக் கொலைகளுக்கு எதிராக 'கவுரவம் மற்றும் பாரம்பரியம் சார்ந்த வன்முறை தடுப்புச் சட்டம்-2026 நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில், ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கான ஆய்வுகளை மேற்கொள்வதற்கென கடந்த நவம்பர் மாதம் திமுக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணையம் ஒன்றை அமைத்தது. அதன் அறிக்கை இன்னும் அரசிடம் ஒப்படைக்கப்படவில்லை.

கடந்த ஆண்டு நெல்லையில் மென்பொறியாளர் கவின் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அதற்கென ஒரு சட்டத்தை இயற்றிட வேண்டுமென தவெக சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தற்போதைய தவெக அரசு 'கேஎன் பாஷா ஆணையத்தின்' பரிந்துரைகளைப் பெற்று ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கான சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.'' எனத் தெரிவித்துள்ளார்.
English Summary
Thirumavalavan urges the immediate enactment of a law to prevent honor killings based on the recommendations of the KN Basha Commission