கருணாநிதியின் பிறந்தநாளை "மாநில சுயாட்சி" நாளாக அறிவிக்க வேண்டும்.! திருமாவளவன் கோரிக்கை..!! 
                                    
                                    
                                   Thirumavalavan request Karunanidhi birthday declared as State Autonomy day
 
                                 
                               
                                
                                      
                                            மறைந்த முன்னாள் முதல்வரும் முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா ஜூன் 3ம் தேதி தொடங்கியது. இதனை ஒட்டி அரசு சார்பிலும், திமுக சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்து காரணமாக துக்கம் அனுசரிக்கப்பட்டதால் ஒரு சில நிகழ்வுகளை தவிர மற்ற நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் இன்று (மே-7) மாலை நடைபெற்றது. பின்னி மில் வளாகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின், திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் கி.வீரமணி, கே.எஸ்.அழகிரி, வைகோ, பாலகிருஷ்ணன், முத்தரசன், கே.எம்.காதர்மொய்தீன், திருமாவளவன், ஜவாஹிருல்லா, ஈஸ்வரன் மற்றும்  அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் திருமாவளவன் பேசியதாவது "இன்றைய காலச்சூழலில், இன்று எழுந்துள்ள மிக முக்கியமான கருத்தியல் போர், மாநில அரசுகள் இப்போதுதான் குமுற தொடங்கியிருக்கின்றன. மத்தியில் அதிகாரத்தை குவிக்கிறார்கள். ஒரே தேசம், ஒரே கலாசாரம், ஒரே ஆட்சி, என்கிறார்கள். இந்த நேரத்தில் அனைத்து மாநிலங்களிலும் ஒரு தலைவரை நினைவு கூர்கிறார்கள் என்றால் அந்த பெருமைக்குரியவர் கருணாநிதி.
இந்தியாவில் எந்த முதல்வரும் எண்ணிப்பார்க்காத ராஜமன்னார் குழுவை அமைத்தவர் கருணாநிதி. அந்தக் குழுவின் பரிந்துரையின்படி சட்டமன்றத்தில், மாநில சுயாட்சித் தீர்மானத்தைக் கொண்டு வருகிறார். இது 1969-1973 காலகட்டத்தில் நிகழ்ந்தது.

அண்ணா மறைவுக்குப் பிறகு கருணாநிதி முழங்கிய 5 முழக்கங்களில் மிகமுக்கியமான முழக்கம் மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி. கூட்டட்சி என்பதைப் பற்றி அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது. ஆனால், சுயாட்சி குறித்து அரசியலமைப்புச் சட்டம் சொல்லவில்லை. சுயாட்சி என்பது கருணாநிதியின் சிந்தனை. ஒவ்வொரு மாநிலத்துக்கும் இறையாண்மை இருப்பதை முதன்முதலில் எடுத்துரைத்தவர் கருணாநிதி.
முதல்வருக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். இரண்டு மூன்று தினங்களுக்கு முன் விழுப்புரத்தில் நடந்த கூட்டத்தில் கருணாநிதியின் பிறந்தநாள் செம்மொழி நாள் என்று அறிவிக்கப்படும் என்று அறிவிப்பு செய்தீர்கள். அது ஒரு மாநிலத்தோடும், ஒரு மொழி அளவோடு நின்றுவிடும். அகில இந்திய பார்வை கொண்டவர் கருணாநிதி. எனவே கருணாநிதி அவர்களின் பிறந்தநாளை மாநில சுயாட்சி நாள் என்று அறிவிக்க வேண்டும்" என விழா மேடையில் கோரிக்கை வைத்துள்ளார்.
                                     
                                 
                   
                       English Summary
                       Thirumavalavan request Karunanidhi birthday declared as State Autonomy day