ச.ம தேர்தலில் போட்டியில்லை... பின்வாங்குகிறாரா திருமாவளவன்? திமுக-வின் அழுத்தம் காரணமா? ஓர் அரசியல் அலசல்!
Thirumavalavan Reconsiders Kattumannarkoil Contest Strategic Shift or DMKs Hidden Pressure
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான வேட்புமனுத் தாக்கல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் குறித்த ஒரு செய்தி அரசியல் வட்டாரங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. கடலூர் மாவட்டத்தின் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடப்போவதாக அறிவித்து, அதற்கான முன்னேற்பாடுகளில் தீவிரமாக இருந்த திருமாவளவன், தற்போது அந்த முடிவை மறுபரிசீலனை செய்வதாகத் தகவல்கள் வெளியாகின்றன. இந்தத் திடீர் பின்வாங்கலுக்குப் பின்னால் திமுக-வின் ‘கடும் அழுத்தம்’ இருப்பதாகக் கூறப்படுவது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக-வின் கணக்கு என்ன?
அறிவிக்கப்பட்டபடி திருமாவளவன் இன்று (ஏப்ரல் 4, 2026) வேட்புமனுத் தாக்கல் செய்திருக்க வேண்டும். ஆனால், திமுக தலைமை அவருக்கு வழங்கிய சில ரகசிய அறிவுறுத்தல்களே இந்தத் தயக்கத்திற்குக் காரணம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். குறிப்பாக, ஒரு கட்சியின் தலைவராக மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்ய வேண்டிய அவசியமிருப்பதால், ஒரு குறிப்பிட்ட தொகுதியில் முடங்கிவிட வேண்டாம் என திமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், தொங்கு சட்டசபை அமைந்தால் அமைச்சர் அல்லது துணை முதல்வராகலாம் என்ற கணக்கில் அவர் களமிறங்கி இருப்பதாகவும், இதனால் அவர் சட்டமன்றத்திற்குள் நுழைவதைத் தடுக்க திமுக இத்தகைய அழுத்தத்தைப் பிரயோகிப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன.
குறிப்பாக நாம் தமிழர் கட்சி நிர்வாகி இடும்பாவனம் கார்த்தி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் தொகுதியில் நிற்கும் முடிவினை திருமாவளவன் மறுபரிசீலனை செய்வதாக ஊடகங்களில் செய்தி வெளியாகிறது.
ஒருவேளை, திருமாவளவன் நிற்காது பின்வாங்கினார் என்றால், அதற்கு முழுக்க முழுக்கக் காரணம், திமுகதான். திமுக கொடுத்த அழுத்தத்தினாலேயே திருமா போட்டியிலிருந்து விலகுகிறார்" என்று வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.
ஒருவேளை அவர் போட்டியிடவில்லை என்றால், அது கட்சியின் தொண்டர்களிடையே பெரும் ஏமாற்றத்தை உருவாக்கும். அதே சமயம், திமுக-வின் அழுத்தத்திற்குப் பணிந்து அவர் பின்வாங்குவது, எதிர்காலத்தில் கூட்டணியில் விசிக-வின் பேரம் பேசும் சக்தியைக் குறைக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.
English Summary
Thirumavalavan Reconsiders Kattumannarkoil Contest Strategic Shift or DMKs Hidden Pressure