விஜய் ஆட்சியில் லஞ்சமே இல்லை...! - தமிழக அரசியலை உலுக்கும் ப.சிதம்பரத்தின் அதிரடி கருத்து...!
There no corruption Vijay regime P Chidambaram shocking statement that shake up Tamil Nadu politics
தமிழகத்தில் ஊழலற்ற, வெளிப்படையான நிர்வாகம் நிலைநிறுத்தப்பட்டு, காமராஜர் ஆட்சியின் உயரிய பண்புகள் மீண்டும் மலர வேண்டும் என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தினார். முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான அரசின் தொடக்ககால நடவடிக்கைகள் நம்பிக்கையளிப்பதாகவும், இந்த ஆட்சி முழு ஐந்து ஆண்டுகளும் தொடர வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.
மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் காமராஜர் பிறந்தநாள் விழாவும், "லஞ்சம் தவிர்... நெஞ்சம் நிமிர்" என்ற மக்கள் விழிப்புணர்வு இயக்கத்தின் நிறைவு விழாவும் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம், காமராஜரின் ஆட்சிமுறையையும் தற்போதைய நிர்வாகத்தையும் ஒப்பிட்டு உரையாற்றினார்.

அவர் பேசுகையில், "தமிழகத்தில் காமராஜர் தலைமையில் நடைபெற்ற ஒன்பது ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சி, நேர்மையான நிர்வாகத்தின் சிறந்த எடுத்துக்காட்டாக இருந்தது. அந்த காலகட்டத்தில் ஊழல், லஞ்சம் போன்ற குற்றச்சாட்டுகள் அரசின் மீது எழாத சூழல் நிலவியது. எந்த அமைச்சரின் மீதும் லஞ்சம் தொடர்பான புகார்களோ, அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளோ எழவில்லை. சிறந்த நிர்வாகம் இருந்தால் ஊழலை கட்டுப்படுத்த முடியும் என்பதை காமராஜர் தனது ஆட்சியின் மூலம் நிரூபித்தார்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக்கழக அரசின் முதல் மாத நிர்வாக நடவடிக்கைகள் மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக பத்திரப் பதிவு அலுவலகங்கள், தனியார் உதவி பெறும் பள்ளிகள், அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் நியமனம், பணியிட மாற்றம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் லஞ்சமின்றி நிர்வாகம் நடைபெறுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இன்னும் பல துறைகளில் முழுமையான வெளிப்படைத்தன்மை ஏற்படுத்தப்பட வேண்டியுள்ளது. அதற்கான சீர்திருத்த நடவடிக்கைகளை முதல்-அமைச்சர் விஜய் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். அவை முழுமையாக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது" என்று குறிப்பிட்டார்.மேலும், "தமிழகத்தில் காமராஜர் ஆட்சியைப் போன்ற ஊழலற்ற நிர்வாகம் உருவாகி, அது முழு ஐந்து ஆண்டுகளும் நீடிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். அதற்காக காங்கிரஸ் கட்சி தனது ஆதரவையும், ஒத்துழைப்பையும் தொடர்ந்து வழங்கும்.
மக்களுக்கு நேர்மையான, லஞ்சமற்ற நிர்வாகம் கிடைப்பதே அனைவரின் இலக்காக இருக்க வேண்டும்" என்றும் ப.சிதம்பரம் வலியுறுத்தினார்.இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி., "காமராஜர் தனது வாழ்நாள் முழுவதையும் கல்வி வளர்ச்சிக்கும், ஏழை மாணவர்களின் முன்னேற்றத்திற்கும் அர்ப்பணித்த தலைவர்.
அவர் உருவாக்கிய மக்கள் மையப்படுத்தப்பட்ட நிர்வாக முறை இன்று வரை முன்மாதிரியாக திகழ்கிறது. அந்தக் காமராஜர் ஆட்சியின் சிறந்த அம்சங்களை மீட்டெடுக்கும் முயற்சியாக தற்போதைய முதல்-அமைச்சர் விஜய் செயல்பட்டு வருவது மக்களிடம் புதிய நம்பிக்கையை உருவாக்கியுள்ளது" என்று தெரிவித்தார்.
English Summary
There no corruption Vijay regime P Chidambaram shocking statement that shake up Tamil Nadu politics