“தவெக ஆட்சிக்கு தற்போது ஆபத்து இல்லை; 5 ஆண்டுகள் நீடிக்குமா தெரியாது” - பகீர் கிளப்பும் பாலகிருஷ்ணன்
There is no immediate threat to the TVK government it is unclear if it will last five years Balakrishnan makes a startling statement
தமிழக வெற்றிக் கழக அரசுக்கு தற்போது உடனடி ஆபத்து இல்லை என்றும், அதே நேரத்தில் இந்த ஆட்சி ஐந்து ஆண்டுகள் முழுமையாக நீடிக்குமா என்பது தெரியாது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தவெக அரசுக்கு வழங்கப்பட்ட ஆதரவு அன்றைய அரசியல் சூழலின் தேவையை கருத்தில் கொண்டதே தவிர, எப்போதும் ஆதரவு வழங்கப்படும் என்று அர்த்தமில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
திருவாரூர் பழைய பேருந்து நிலையம் முன்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி சிபிஎம் மற்றும் சிபிஐ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற நிலையில், சிபிஎம் முன்னாள் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாலகிருஷ்ணன், தலைமைத் தேர்தல் ஆணையர் விவகாரத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்துள்ளதாக தெரிவித்தார். பாஜக தங்களது கொள்கை எதிரி என்று தமிழக முதல்வர் கூறுவதாக குறிப்பிட்ட அவர், ஞானேஷ்குமாரை கண்டித்து இதுவரை முதல்வர் விஜய் ஒரு வார்த்தைகூட பேசவில்லை என்றும் விமர்சித்தார்.
மேலும், ஞானேஷ்குமார் பதவி விலகும் வரை நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார். தவெக அரசுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் வழங்கிய ஆதரவு குறித்தும் விளக்கம் அளித்த பாலகிருஷ்ணன், “அன்றைய தேவையில் ஆதரவு கொடுக்கப்பட்டது. அதற்கு எப்போதும் ஆதரவு என்று அர்த்தம் இல்லை” என்று கூறினார்.
மீண்டும் சட்டப்பேரவையில் வாக்கெடுப்பு நடைபெறும் சூழல் ஏற்பட்டால், அப்போது ஆதரவு அளிப்பது குறித்து கட்சி முடிவு செய்யும் என்றும் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதனால் தவெக அரசுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவு எதிர்காலத்திலும் தொடரும் என்ற உறுதி இல்லை என்பது அவரது பேச்சின் மூலம் தெரியவந்துள்ளது.
தவெக கூட்டணியில் பாமக இணைந்தால் விசிகவின் நிலை என்னவாகும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். விசிக மற்றும் பாமக ஆகிய இரு கட்சிகளையும் ஒரே கூட்டணியில் வைத்துக்கொண்டு தவெக செயல்பட முடியுமா என்றும் பாலகிருஷ்ணன் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
அதே நேரத்தில், தற்போதைய அரசியல் சூழலில் தமிழக வெற்றிக் கழக அரசை உடனடியாக கவிழ்க்கும் நிலை இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார். “தற்போது ஆட்சிக்கு ஆபத்து இல்லை. ஆனால் ஐந்து ஆண்டுகள் நீடிக்குமா என்று தெரியவில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்து வந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் தற்போது இந்த இரு தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகின்றன. இதனால் தேர்தல் களம் பலமுனைப் போட்டியாக மாறியுள்ளது.
தவெக அரசின் செயல்பாடுகள் தொடர்பாக பட்டினப்பாக்கம் புதிய தலைமைச் செயலக விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், தற்போது பாலகிருஷ்ணன் ஆட்சியின் எதிர்காலம் குறித்து தெரிவித்துள்ள கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன.
English Summary
There is no immediate threat to the TVK government it is unclear if it will last five years Balakrishnan makes a startling statement