விஜய் வந்து சென்றும் தாராபுரத்தில் மாறாத நிலைமை? சத்யபாமாவுக்கு தொடரும் எதிர்ப்பு!தாராபுரத்தில் தள்ளாடுதே தவெக! ஷாக் ரிப்போர்ட்! - Seithipunal
Seithipunal


தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இரு தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மதுராந்தகத்தில் தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவு இருப்பதாக கூறப்படும் நிலையில், தாராபுரத்தில் அக்கட்சியின் வேட்பாளர் சத்யபாமாவுக்கு எதிர்ப்பு தொடர்வதாக களத்தில் இருந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக முதல்வர் விஜய் தாராபுரத்தில் பிரசாரம் மேற்கொண்ட பிறகும் நிலைமையில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனி சட்டமன்றத் தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் திமுக, அதிமுக, தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தவெக சார்பில் போட்டியிடும் சத்யபாமாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சில பகுதிகளில் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் அவர் போலீஸ் பாதுகாப்புடன் பிரசாரம் மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே சத்யபாமாவை ஆதரித்து முதல்வர் விஜய் தாராபுரத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் மற்றும் ரோடு ஷோ மூலம் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். விஜய்யின் வருகை தவெக வேட்பாளருக்கு சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது பிரசாரத்துக்குப் பிறகும் சில பகுதிகளில் சத்யபாமாவுக்கு எதிர்ப்பு நீடிப்பதாக கூறப்படுகிறது.

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சத்யபாமா, பின்னர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். இதையடுத்து நடைபெறும் இடைத்தேர்தலில் அவரையே தவெக மீண்டும் வேட்பாளராக களமிறக்கியுள்ளது. ஆனால், பதவியை ராஜினாமா செய்த விவகாரம் தொடர்பாக ஒரு தரப்பினர் அதிருப்தி தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும், சத்யபாமாவுக்கு எதிராக அதிமுகவினர் சில இடங்களில் பிரசாரம் மேற்கொள்வதாகவும், சமூக வலைதளங்களில் அவரை விமர்சித்து பதிவுகள் அதிகளவில் பகிரப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அவர் மன உளைச்சலில் இருப்பதாகவும், நேற்று விஜய் முன்னிலையில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் சத்யபாமா உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் மல்க பேசியதாகவும் கூறப்படுகிறது.

முதல்வர் விஜய் நேரடியாக தாராபுரத்திற்கு வந்து பிரசாரம் செய்த பின்னரும் எதிர்ப்பு தொடர்வதாக கூறப்படுவது தவெக தரப்புக்கு சவாலாக மாறியுள்ளது. இந்நிலையில், இன்று சில பகுதிகளில் சத்யபாமா பிரசாரம் செய்ய திட்டமிட்டிருந்ததாகவும், அங்கு எதிர்ப்பு எழுந்ததால் அவர் அந்த நிகழ்ச்சிகளை தவிர்த்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், எஞ்சியுள்ள நாட்களில் பிரசாரத்தை எவ்வாறு தீவிரப்படுத்துவது என்பது குறித்து தவெக தரப்பில் ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. விஜய்யின் பிரசாரத்துக்குப் பிறகும் தாராபுரத்தில் வேட்பாளருக்கு எதிரான உள்ளூர் எதிர்ப்புகள் நீடிப்பதாக வெளியாகும் தகவல்கள், இடைத்தேர்தல் களத்தில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Has the situation in Dharapuram remained unchanged despite Vijay visit Opposition against Sathyabama continues TVK faltering in Dharapuram Shocking report


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->