"ஆமாம்... நீங்கள் சோகமாக இருந்தது உலகத்துக்கே தெரியும்!" தளபதி கச்சேரி டான்ஸ் ஞாபகம் இருக்கா?– விஜய்க்கு திமுக ஐடி விங் கடும் பதிலடி
the whole world knew you were sad Do you remember the Thalapathy concert dance DMK IT Wing hits back hard at Vijay
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து முதல்வர் விஜய் உருக்கமாக பேசியதையடுத்து, திமுக ஐடி விங் சமூக வலைதளத்தில் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளது. குறிப்பாக, மலேசியாவில் நடைபெற்ற ஜனநாயகன் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் விஜய் நடனமாடிய காட்சிகளை பகிர்ந்து, அவரது பேச்சுக்கு எதிர்வினையாற்றியுள்ளது.
திமுக ஐடி விங் தனது சமூக வலைதள பதிவில், "ஆமாம்... நீங்கள் சோகமாக இருந்தது உலகத்துக்கே தெரியும். ஆடியோ லாஞ்ச், சீமந்த விழா, பிறந்தநாள் கேக் வெட்டுதல், புதுமனை புகுவிழா, திருமண நிகழ்ச்சிகள் என எத்தனை 'சோக' காட்சிகளை பார்த்தோம்," என்று கிண்டலாக பதிவிட்டுள்ளது.
அந்தப் பதிவுடன், மலேசியாவில் நடைபெற்ற ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் 'தளபதி கச்சேரி' பாடலுக்கு விஜய் நடனமாடிய வீடியோவையும் பகிர்ந்துள்ளது. மேலும், கவுண்டமணி–சத்யராஜ் நடித்த பிரபல நகைச்சுவைக் காட்சியில் இடம்பெறும் "அடங்கப்பா... இது உலக மகா நடிப்புடா சாமி!" என்ற வசனம் இடம்பெற்ற படத்தையும் இணைத்து பதிவிட்டுள்ளது.
இந்த எதிர்வினைக்கு காரணமாக அமைந்தது, கரூர் வெண்ணெய்மலையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் ஆற்றிய உரை. அப்போது கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விரிவாக பேசிய அவர், மக்களை நேரில் சந்தித்து அவர்களது பிரச்சினைகளை அறியவே தனது பயணத்தைத் தொடங்கியதாக தெரிவித்தார்.
அரியலூரில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு பெரம்பலூருக்கு செல்ல இருந்தபோது, அங்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதாக காவல்துறையினர் எச்சரித்ததால், பாதுகாப்பு கருதி அந்த நிகழ்ச்சியை ரத்து செய்து திரும்பியதாகவும், பின்னர் பெரம்பலூர் மக்களிடம் அதற்காக மன்னிப்பும் கேட்டதாகவும் விஜய் கூறினார்.
அதேபோல், நாமக்கல்லில் இருந்து கரூருக்கு செல்லும் முன்பும், அங்கு நிலைமை கட்டுக்கடங்காததாக இருந்தால் காவல்துறை தங்களை எச்சரித்திருக்கலாம் என்றும், "கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை; வர வேண்டாம்" என்று தெரிவித்திருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
"போலீசார் விரும்பினால் எந்த கூட்டத்தையும் ரத்து செய்ய முடியும். ஆனால் அவ்வாறு செய்யாமல், நெடுஞ்சாலையிலிருந்து வேலுச்சாமிபுரம் வரை காவல்துறையினரே எங்களை அழைத்துச் சென்றார்கள். அவர்களை முழுமையாக நம்பியிருந்தேன். பின்னர் நடந்த சம்பவத்திற்கு என்னையே பொறுப்பாக்க முயன்றனர்," என்று விஜய் தெரிவித்தார்.
மேலும், "கரூரில் பேசும்போது காவல்துறைக்கு நன்றி தெரிவித்தேன். ஆனால் இப்படி ஒரு நிலை உருவாகும் என்று எனக்குத் தெரியாது. இந்த சம்பவத்திற்குப் பின்னால் யார்? யார் உத்தரவிட்டார்கள்? ஏன் இப்படி நடந்தது? என்ற கேள்விகளுக்கு பதில் கிடைக்க வேண்டும். சம்பவத்திற்குப் பிறகு நான் வீட்டில் வேதனையுடன் இருந்தபோதும், ஓடி ஒளிந்துவிட்டதாக குற்றம்சாட்டினர். வாய் இருந்தால் எதை வேண்டுமானாலும் பேசலாமா?" என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்.
முதல்வர் விஜயின் இந்தக் கருத்துகளுக்குப் பதிலளிக்கும் வகையில்தான் திமுக ஐடி விங் சமூக வலைதளத்தில் விமர்சனப் பதிவை வெளியிட்டுள்ளது. கரூர் சம்பவம் தொடர்பாக அரசியல் குற்றச்சாட்டுகளும் எதிர்க்குற்றச்சாட்டுகளும் தொடர்ந்து வலுத்து வரும் நிலையில், இந்த புதிய வார்த்தைப் போர் தமிழக அரசியல் களத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
the whole world knew you were sad Do you remember the Thalapathy concert dance DMK IT Wing hits back hard at Vijay