திமுக-தவெகதான் டார்கெட்..அடிச்சி ஆடுங்க..3 மாதத்திற்குள் கட்சி லான்ச்! பை-லாவை தயார் செய்யும் அண்ணாமலை!
The targets are DMK and TVK go all out Party launch within three months Annamalai preparing the bylaws
பாஜகவிலிருந்து விலகி ‘வி தி லீடர்ஸ்’ (We The Leaders) என்ற புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கியுள்ள முன்னாள் தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை, வரும் அக்டோபர் மாதத்தில் புதிய அரசியல் கட்சியை தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான ஆரம்பகட்ட பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேசிய கட்சிகளின் அரசியல் தமிழ்நாட்டில் முழுமையாக வேரூன்றவில்லை என்ற புரிதலின் அடிப்படையில், மாநில அரசியலை மையப்படுத்திய தனிக்கட்சி உருவாக்கும் முடிவுக்கு அண்ணாமலை வந்துள்ளதாக கூறப்படுகிறது. திராவிட அரசியல், சமூக நீதி மற்றும் மக்கள் பிரச்சினைகளை மையமாகக் கொண்ட பெயரை புதிய கட்சிக்கு தேர்வு செய்ய வேண்டும் என தனது நெருங்கிய நண்பர்கள் மற்றும் ஆலோசகர்களுடன் அவர் ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, புதிய கட்சியை இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதற்கான நடைமுறைகள் குறித்தும் அண்ணாமலை தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார். குறிப்பாக, கட்சியின் அமைப்பு எப்படி இருக்க வேண்டும், சட்ட விதிகள் (By-laws) எவ்வாறு வடிவமைக்கப்பட வேண்டும், நிர்வாக கட்டமைப்பு எந்த வடிவில் இருக்க வேண்டும் என்பது குறித்து பல்வேறு ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
அண்ணாமலைக்கு நெருக்கமான வட்டாரங்களின் தகவலின்படி, பாஜகவின் அடிமட்டத் தொண்டர்களில் கணிசமானோர் மற்றும் இளைஞர்கள் அவரது புதிய இயக்கத்தின் பக்கம் ஈர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், திராவிடக் கட்சிகள் மற்றும் தற்போதைய அரசியல் மாற்றங்களுக்கு மாற்று சக்தியை எதிர்பார்க்கும் இளைஞர்களும் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் ஆர்வம் காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
புதிய கட்சியின் கட்டமைப்பு தொடர்பாக, தலைமைப் பதவி ‘தலைவர்’ என்ற பெயரில் இருக்க வேண்டுமா அல்லது ‘பொதுச்செயலாளர்’ என்ற பதவி அதிக அதிகாரம் கொண்டதாக இருக்க வேண்டுமா என்ற விவாதமும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அதேபோல், மாநில அளவிலான நிர்வாகப் பதவிகளின் எண்ணிக்கையை குறைவாக வைத்திருக்கலாமா அல்லது விரிவுபடுத்தலாமா என்பதும் ஆலோசனையில் உள்ளது.
குறிப்பாக, திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு முக்கிய அரசியல் கட்சிகளின் சட்ட விதிகள் மற்றும் அமைப்பு நடைமுறைகளை அண்ணாமலை ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு அரசியல் கட்சியின் உள்கட்டமைப்பு மற்றும் சட்ட விதிகளை உருவாக்குவதில் இந்த இரு கட்சிகளின் அனுபவம் முக்கியமானதாக இருப்பதால், அவற்றை முன்மாதிரியாகக் கொண்டு தனது புதிய கட்சியின் சட்ட விதிகளை வடிவமைக்க அவர் முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
தேர்தல் ஆணையத்தில் புதிய கட்சியை பதிவு செய்யும் போது, கட்டமைப்பு மற்றும் சட்ட விதிகளில் குறைபாடுகள் இருந்தால் மனு திருப்பி அனுப்பப்படலாம். எனவே, ஜனநாயக அடிப்படையில் வலுவான கட்டமைப்பை உருவாக்குவதில் அண்ணாமலை சிறப்பு கவனம் செலுத்தி வருவதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், புதிய கட்சியின் தலைவராக அண்ணாமலை தானே பொறுப்பேற்பாரா அல்லது வேறு ஒரு அமைப்பு வடிவத்தை தேர்வு செய்வாரா என்பது குறித்தும் அவர் தனது நெருங்கிய வட்டாரங்களிடம் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், பெரும்பாலான ஆதரவாளர்கள் அவர் நேரடியாக கட்சித் தலைவராகப் பொறுப்பேற்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
அனைத்து ஆலோசனைகளையும் அடுத்த மூன்று மாதங்களில் நிறைவு செய்து, அக்டோபர் மாதத்தில் புதிய கட்சியை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்ய அண்ணாமலை திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவரது இந்த அடுத்தகட்ட நகர்வு, தமிழக அரசியலில் புதிய கூட்டணிகள் மற்றும் புதிய அரசியல் சமன்பாடுகளை உருவாக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
English Summary
The targets are DMK and TVK go all out Party launch within three months Annamalai preparing the bylaws