விஜய் கைக்கு போன சர்வே..நீங்க சொன்னது எதுவும் நடக்கலையே! ‘சைலன்ட் மோட்’-க்கு சென்ற தவெக! அமைதிக்கு இதுதான் காரணம்
The survey that went to Vijay hands Nothing you said will happen Thaveka went into silent mode This is the reason for the silence
தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய், கடந்த சில வாரங்களாக முழுமையான அமைதியில் இருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான விவாதத்தை உருவாக்கியுள்ளது. பொதுவாக அரசியல், சமூக விஷயங்களில் தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் விஜய், சமீப காலமாக எந்த முக்கிய விவகாரத்திலும் பேசாமல் இருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த அமைதிக்குப் பின்னால் சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு தனியார் சர்வே தான் முக்கிய காரணம் என, விஜய்க்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கிட்டத்தட்ட கடந்த மூன்று வாரங்களாக தவெக கட்சி செயல்பாடுகள் ‘சைலன்ட் மோட்’-ல் இருப்பதாகவே சொல்லப்படுகிறது. கட்சி தலைவர் விஜய் எந்த மேடையிலும் பேசவில்லை. சமூக வலைதளங்களில் அரசியல் சார்ந்த பதிவுகள் இல்லை. சில வாழ்த்து பதிவுகளைத் தவிர, எந்தவிதமான கருத்தும் வெளியிடப்படவில்லை. ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் யாரும் ஊடகங்களில் பேசவில்லை. பொங்கலை முன்னிட்டு தவெக சார்பில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த விழாவும் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த அமைதிக்கான ஒரு காரணமாக, நாளை நடைபெற உள்ள சிபிஐ விசாரணையும், அதனைத் தொடர்ந்து ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடர்பான நீதிமன்ற வழக்கும் குறிப்பிடப்படுகின்றன. இந்த இரு முக்கிய நிகழ்வுகளுக்கிடையில் விஜய் வெளியில் வராமல், சட்டரீதியான ஆலோசனைகளில் கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், அரசியல் ரீதியாக விஜயை அதிகம் பாதித்தது சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு தனியார் கருத்துக் கணிப்பே என கூறப்படுகிறது. மாவட்ட வாரியாக எடுத்த மாதிரி அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த சர்வேயில், தவெகக்கு மாநில அளவில் 10 சதவிகிதம் கூட வாக்கு ஆதரவு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. வட மாவட்டங்களில் ஓரளவு ஆதரவு இருப்பதாகவும், அதைத் தவிர மற்ற பகுதிகளில் கட்சிக்கு பெரிய தாக்கம் இல்லை என்றும் அந்த கணிப்பு கூறுகிறது. பெண்கள் மத்தியில் ஆதரவு இருப்பினும், அது வெற்றி பெறும் அளவுக்கு போதுமானதாக இல்லை என்றும், இன்னும் தவெக அதிமுகவுக்குக் கீழேயே உள்ளது என்றும் சர்வே முடிவுகள் சுட்டிக்காட்டியதாக கூறப்படுகிறது.
இந்த சர்வே முடிவுகளை பார்த்த பிறகு விஜய் கடும் அதிர்ச்சியில் இருப்பதாகவும், கட்சிக்குள் உள்ள ஒரு முக்கிய தலைவரிடம், “நீங்கள் சொன்னது எதுவும் நடக்கலையே” என்று கடிந்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சர்வேயின் மற்றொரு முக்கிய அம்சம், நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் இடையிலான ஆதரவு வேறுபாடு. நகரங்கள், மாநகராட்சிகளில் தவெகக்கு சுமார் 10 சதவிகிதம் வரை ஆதரவு இருப்பதாகவும், கிராமப்புற மற்றும் புறநகர் பகுதிகளில் அந்த ஆதரவு 10 சதவிகிதத்திற்கும் கீழ் இருப்பதாகவும் கூறப்படுகிறது. நகர்ப்புற இளைஞர்கள், முதல்முறை வாக்காளர்கள், நடுத்தர வர்க்கத்தில் தவெக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும், கிராமப்புறங்களில் அந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை என்பதே இந்த கணிப்பின் முக்கிய எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.
அரசியல் பார்வையாளர்கள் கூறுவதாவது, சட்டமன்றத் தேர்தல்களில் கிராமப்புற வாக்காளர்களே முடிவை தீர்மானிக்கும் முக்கிய சக்தி. நகர்ப்புற ஆதரவு மட்டும் போதாது. கிராமங்களில் வலுவான அமைப்பு, தரைநிலை பணிகள் மற்றும் கூட்டணி அரசியல் இல்லையெனில் வெற்றி கடினம். இதனால், இந்த இடைவெளியை தவெக எவ்வாறு நிரப்பப் போகிறது என்ற கேள்வி தற்போது அரசியல் வட்டாரங்களில் தீவிரமாக எழுந்துள்ளது.
சர்வே முடிவுகளால் ஏற்பட்ட அதிர்ச்சி, சிபிஐ விசாரணை, நீதிமன்ற வழக்கு ஆகிய மூன்றும் ஒரே நேரத்தில் வந்துள்ளதால் தான் விஜய் தற்போது அமைதியான யுக்தியை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த அமைதி புதிய அரசியல் வியூகத்திற்கான முன்னோட்டமா, அல்லது தற்காலிக பின்னடைவை சமாளிக்கும் இடைவேளையா என்பது அடுத்த சில நாட்களில் விஜய் எடுக்கும் முடிவுகளால் தெளிவாகும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
English Summary
The survey that went to Vijay hands Nothing you said will happen Thaveka went into silent mode This is the reason for the silence