'ஜனநாயகன்' கதை விவாதம் காட்டுக்குள் நடந்தது.. இயக்குநர் வினோத் குறித்து இரா.சரவணன் நெகிழ்ச்சி பதிவு
The story discussion for Jananayagan took place in the forest Ra Saravanan shares a touching post about director Vinoth
நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமாக வெளியாகியுள்ள 'ஜனநாயகன்' திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அந்தப் படத்தின் கதை விவாதம் நடைபெற்ற விதம் குறித்து இயக்குநர் இரா.சரவணன் பகிர்ந்துள்ள பதிவு சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவான 'ஜனநாயகன்' திரைப்படம், சென்சார் மற்றும் இணைய கசிவு உள்ளிட்ட பல்வேறு சவால்களை கடந்து வெளியாகியுள்ளது. படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், விஜய்யின் கடைசி திரைப்படம் என்ற உணர்வால் ரசிகர்கள் உணர்ச்சிப்பூர்வமாக வரவேற்று வருகின்றனர்.
படம் முடிவில் இடம்பெறும் விஜய்யின் காணொளி தொகுப்பும், "இனிமேல் வரமாட்டேன்" என்ற வசனமும் ரசிகர்களை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம், திரைப்படம் முதல் நாளிலேயே உலகம் முழுவதும் ரூ.70 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக திரையுலக வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், இயக்குநர் இரா.சரவணன் தனது முகநூல் பதிவில், 'ஜனநாயகன்' படத்தின் கதை உருவான பின்னணியை பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில், "வா... போகலாம் என்று அழைத்தார். வண்டி வயநாட்டில் போய் நின்றது. வினோத், அவரது இரண்டு உதவி இயக்குநர்கள், நானும் என நான்கு பேர்தான் இருந்தோம். விஜய் சார் படத்தின் கதை விவாதம் என்றதும் பெரிய ஹோட்டலில் நடக்கும் என்று நினைத்தேன். ஆனால், ஒரு மலைப்பகுதியில் உள்ள எளிய குடிசை வீட்டுக்கே அழைத்துச் சென்றார். மிகவும் எளிமையான இடம், எளிமையான உணவு என ஒரு சாமியார் போலவே வாழ்ந்தார்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "தொடர்ந்து தீவிரமாக கதை விவாதம் நடைபெற்றது. முழு திருப்தி கிடைத்த ஒரு நாள், பாறையின் மீது நிம்மதியாக படுத்து உறங்கினார் வினோத். 'இந்தப் பூவுலகில் நாமெல்லாம் புழு, பூச்சிகளைவிட சிறியவர்கள்' என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே, எதையும் தலைக்கு ஏற்றிக்கொள்ளாமல் வாழும் வினோத் இன்னும் பல உச்சங்களை எட்டுவார். 'ஜனநாயகன்' வெற்றி பெறட்டும்; ஜனநாயகம் பூத்துக் குலுங்கட்டும்" என்றும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
இரா.சரவணனின் இந்த பதிவு, இயக்குநர் வினோத்தின் எளிமையான வாழ்க்கை முறை மற்றும் திரைப்பட உருவாக்கத்தில் அவர் காட்டிய அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாக சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
English Summary
The story discussion for Jananayagan took place in the forest Ra Saravanan shares a touching post about director Vinoth