ஆட்டத்தை தொடங்கிய அண்ணாமலை! கட்சி பெயர், கொடி ரெடி.. செப்டம்பரில் முதல் கட்சி மாநாடு! அண்ணாமலை மாஸ் பிளான்!
Annamalai kicks off the game Party name and flag are ready the first party conference is set for September Annamalai grand plan
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு மாநில அரசியலில் பல்வேறு மாற்றங்கள் அரங்கேறி வரும் நிலையில், பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது 'வி தி லீடர்ஸ்' இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றுவதற்கான பணிகளை தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய கட்சியின் பெயர் மற்றும் கொடியை அடுத்த மாதம் அறிவித்துவிட்டு, செப்டம்பரில் முதல் மாநில மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு தமிழக அரசியல் சூழலில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகளில் அமைப்பு ரீதியான மாற்றங்கள் நடைபெற்று வரும் நிலையில், பாஜகவிலும் தலைமை மாற்றம் இடம்பெற்றது. மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலைக்கு பதிலாக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, கட்சி நடவடிக்கைகளில் அண்ணாமலைக்கு முக்கியத்துவம் குறைந்ததாக கூறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை, 'வி தி லீடர்ஸ்' என்ற அமைப்பை தொடங்கி, மாநிலம் முழுவதும் உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தை முன்னெடுத்து வருகிறார். இந்த இயக்கம் தொடங்கிய முதல் நாளிலேயே லட்சக்கணக்கானோர் உறுப்பினர்களாக இணைந்ததாகவும், அண்மையில் பொள்ளாச்சியில் நடைபெற்ற முதல் மாநாட்டில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றதாகவும் கூறப்படுகிறது.
அரசியல் விமர்சனங்களில் அடிக்கடி கருத்து தெரிவித்து வந்த அண்ணாமலை, தற்போது தவெக அரசை ஓராண்டு காலத்திற்கு விமர்சிக்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். அண்மைக் காலமாக அவர் செய்தியாளர் சந்திப்புகளைத் தவிர்த்து, சமூக வலைதளங்கள் வாயிலாகவே தனது கருத்துகளை வெளியிட்டு வருகிறார்.
இதற்கிடையில், 'வி தி லீடர்ஸ்' இயக்கத்தின் இரண்டாவது மாநாட்டை தூத்துக்குடியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தென் மாவட்டங்களில் அமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து மண்டல வாரியாக மாநாடுகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், உள்ளாட்சி தேர்தல் மற்றும் எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை இலக்காக வைத்து, இயக்கத்தை முழுமையான அரசியல் கட்சியாக மாற்ற அண்ணாமலை தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக புதிய கட்சியின் பெயர் மற்றும் கொடி தயாராகி வருவதாகவும், ஆகஸ்ட் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் அவற்றை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து செப்டம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் மதுரை அல்லது திருச்சியில் புதிய கட்சியின் முதல் மாநில மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள 'வி தி லீடர்ஸ்' நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களிடம் கருத்துகள் பெறப்பட்டு வருவதாகவும், உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அமைப்பு விரிவாக்கப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
English Summary
Annamalai kicks off the game Party name and flag are ready the first party conference is set for September Annamalai grand plan