2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தோல்வியைச் சந்தித்துள்ள நிலையில், அக்கட்சிக்குள் மீண்டும் அணிகள் உருவாகியிருப்பதாக வெளியாகும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு தரப்பும், சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி தலைமையில் மற்றொரு தரப்பும் செயல்படுவதாக கூறப்படும் நிலையில், அதிமுகவின் பழைய பிளவு வரலாறு மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.
1972ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட அதிமுக, தமிழக அரசியலில் மிகப்பெரிய மக்கள் இயக்கமாக உருவெடுத்தது. 1977ஆம் ஆண்டு ஆட்சியைப் பிடித்த அந்த கட்சி, தொடர்ந்து பல ஆண்டுகள் தமிழக அரசியலில் ஆதிக்கம் செலுத்தியது. ஆனால், கட்சியின் ஆரம்ப காலத்திலேயே உள்கட்சி கருத்து வேறுபாடுகளும் உருவாகத் தொடங்கின.
எம்.ஜி.ஆருக்கு நெருக்கமானவராக இருந்த எஸ்.டி.சோமசுந்தரம், கருத்து வேறுபாடு காரணமாக 1984ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் தனியாக ‘நமது கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கிய அவர், சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதிமுகவுக்கு திரும்பினார்.
ஆனால், அதிமுக வரலாற்றில் மிகப்பெரிய பிளவு ஏற்பட்டது எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகுதான். 1987 டிசம்பர் 24ஆம் தேதி எம்.ஜி.ஆர் மறைந்ததைத் தொடர்ந்து, அவரது மனைவி ஜானகி ராமச்சந்திரன் தலைமையிலும், ஜெயலலிதா தலைமையிலும் அதிமுக இரண்டு அணிகளாகப் பிரிந்தது.
இரு தரப்பும் தாங்கள்தான் அதிமுகவின் உண்மையான வாரிசு எனக் கூறிய நிலையில், சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட மோதல் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இறுதியில் ஜானகி தலைமையிலான அரசு கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
1989 சட்டப்பேரவைத் தேர்தலில் ஜானகி அணியும் ஜெயலலிதா அணியும் தனித்தனியாக போட்டியிட்டன. இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதால் இரு அணிகளும் வெவ்வேறு சின்னங்களில் களமிறங்கின. ஜெயலலிதா அணி 27 இடங்களிலும், ஜானகி அணி 2 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதையடுத்து ஜானகி அரசியலில் இருந்து விலக, அதிமுக ஜெயலலிதாவின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
ஜெயலலிதா தலைமையிலும் கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் தொடர்ந்தன. முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு எம்.ஜி.ஆர் கழகத்தைத் தொடங்கினார். திருநாவுக்கரசரும் ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதிமுகவில் இருந்து விலகி தனிக் கட்சி தொடங்கினார். பின்னர் அவர் மீண்டும் அதிமுகவில் இணைந்ததும், மீண்டும் வெளியேறியதும் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட பிளவுதான் அதிமுகவின் அரசியல் எதிர்காலத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
2016 டிசம்பரில் ஜெயலலிதா மறைந்தபோது ஓ.பன்னீர்செல்வம் முதல்வரானார். பின்னர் சசிகலா முதல்வராக முயன்ற நிலையில், ஓபிஎஸ் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் தர்மயுத்தத்தைத் தொடங்கிய ஓபிஎஸ், சசிகலா தரப்புக்கு எதிராக வெளிப்படையாக களமிறங்கினார்.
சசிகலா சிறை சென்றதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி முதல்வரானார். சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் எதிர்த்து வாக்களித்தனர். இதனால் அதிமுக மீண்டும் இரு அணிகளாகப் பிரிந்தது.
பின்னர் 2017ஆம் ஆண்டு ஓபிஎஸ்-இபிஎஸ் அணிகள் இணைந்தன. ஓபிஎஸ் துணை முதல்வராகவும், கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் பொறுப்பேற்றார். ஆனால் இந்த இணைப்பும் நீண்ட காலம் நீடிக்கவில்லை.
இதற்கிடையில் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர். எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் ஆளுநரை சந்தித்து அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாகக் கடிதம் அளித்தனர். பின்னர் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற டிடிவி தினகரன், பின்னர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார். இதன் மூலம் அதிமுகவின் வாக்கு வங்கியில் மேலும் ஒரு பிளவு ஏற்பட்டது.
2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தீவிரமடைந்தது. இறுதியில் எடப்பாடி பழனிசாமி கட்சியின் முழுமையான கட்டுப்பாட்டைப் பெற்றதுடன், ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஓபிஎஸ் தலைமையில் வைத்திலிங்கம், ஜே.சி.பி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் தனி அணியாக செயல்பட்டனர்.
இந்நிலையில், 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுக மீண்டும் புதிய அரசியல் நெருக்கடியை எதிர்கொள்வதாக கூறப்படுகிறது. அதிமுக 47 இடங்களில் வெற்றி பெற்றாலும் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை. மறுபுறம் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே அதிமுக திமுகவுடன் கூட்டணி அமைக்கலாம் என்ற தகவல் கட்சிக்குள் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா உள்ளிட்ட சில முக்கிய தலைவர்கள் தவெகவில் இணைந்ததாக தகவல்கள் வெளியாகின. செங்கோட்டையன் உள்ளிட்ட சில முக்கிய தலைவர்களும் அதிமுகவில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.
தற்போது எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தரப்பு தனியாக செயல்படுவதாக வெளியாகும் தகவல்கள், அதிமுகவில் மீண்டும் அணிகள் உருவாகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு ஜானகி–ஜெயலலிதா, ஜெயலலிதா காலத்தில் ஏற்பட்ட உள்கட்சி மோதல்கள், சசிகலா–ஓபிஎஸ்–இபிஎஸ் மோதல், டிடிவி தினகரன் பிரிவு, ஓபிஎஸ்–இபிஎஸ் பிளவு என ஒவ்வொரு காலகட்டத்திலும் அதிமுக பல்வேறு அரசியல் நெருக்கடிகளை சந்தித்துள்ளது.
இருப்பினும் ஒவ்வொரு முறையும் அதிமுக மீண்டும் அரசியல் களத்தில் வலுவாக திரும்பியதற்கு எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா உருவாக்கிய வலுவான தொண்டர் கட்டமைப்பும், அந்த கட்சிக்கு இருந்த பாரம்பரிய வாக்கு வங்கியும் முக்கிய காரணங்களாக பார்க்கப்பட்டன.
ஆனால் தற்போது அந்த இரு பெரும் தலைவர்களும் இல்லாத நிலையில், புதிய தலைமையின் கீழ் அதிமுக மீண்டும் தன்னை ஒருங்கிணைத்து எழுமா என்பதே மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.
வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் அடுத்தடுத்த தேர்தல்கள்தான், அதிமுகவின் தற்போதைய பிளவு தற்காலிகமானதா அல்லது கட்சியின் எதிர்காலத்தையே மாற்றக்கூடிய புதிய அத்தியாயமா என்பதை தீர்மானிக்கும் முக்கிய களமாக அமையும்.