10 நாட்கள் தாமதமாக முழு டேட்டாவை வெளியிட்ட தேர்தல் ஆணையம்! ஏன் இவ்ளோ லேட்? தேர்தல் ஆணையம் மீது கேள்விகள்! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிந்து 10 நாட்களுக்குப் பிறகே தொகுதி வாரியான முழுமையான வாக்குப்பதிவு விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த தாமதம் அரசியல் வட்டாரங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. நான்கு முனைப் போட்டி நிலவிய இந்த தேர்தலில், காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. தேர்தல் நாளின் இறுதியில், மொத்த வாக்குப்பதிவு சதவீதம் 85.15% என தேர்தல் ஆணையம் தற்காலிகமாக அறிவித்தது.

பின்னர் இரண்டு நாட்கள் கழித்து மறுசரிபார்ப்பின் அடிப்படையில் இந்த சதவீதம் 85.10% ஆக திருத்தப்பட்டது. இருப்பினும் தொகுதி வாரியான முழுமையான வாக்குப்பதிவு விவரங்கள் வெளியிடப்படாமல் இருந்ததால் அரசியல் கட்சிகள் விளக்கம் கோரியிருந்தன.

இந்த நிலையில், மே 2ஆம் தேதி தேர்தல் ஆணையம் தொகுதி வாரியான முழு தரவுகளையும் வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் மொத்தம் 4.87 கோடி வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தியுள்ளனர். மொத்த வாக்குப்பதிவு 85.10% ஆக பதிவாகியுள்ளது. இதில் கரூர் மாவட்டம் 92.6% வாக்குப்பதிவுடன் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளது.

வரும் மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் முடிந்து 10 நாட்களுக்குப் பிறகே இந்த முழு தரவுகள் வெளியாகியிருப்பது விவாதத்தை கிளப்பியுள்ளது.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில், வாக்குப்பதிவு நடந்த மறுநாளே தேர்தல் ஆணையம் முழுமையான வாக்குப்பதிவு விவரங்களை வெளியிட்டது. ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், ஏப்ரல் 7ஆம் தேதி காலை தொகுதி வாரியான விவரங்கள் வெளியிடப்பட்டிருந்தன.

ஆனால், 2024 மக்களவைத் தேர்தலிலும் இதேபோல் தாமதம் ஏற்பட்டது. முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி நடந்த நிலையில், அதன் முழு தரவுகள் ஏப்ரல் 30ஆம் தேதிதான் வெளியிடப்பட்டன. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவிற்கும் 4 நாட்கள் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் தரவுகள் உடனுக்குடன் பதிவாகும் சூழலில், முழுமையான வாக்குப்பதிவு எண்ணிக்கைகளை வெளியிட ஏன் இத்தனை நாட்கள் தேவைப்படுகிறது என்ற கேள்வி அரசியல் கட்சிகளால் முன்வைக்கப்படுகிறது.

சில மணி நேரங்களில் கோடிக்கணக்கான வாக்குகளை எண்ணி முடிவுகளை அறிவிக்கக்கூடிய அமைப்பு, வாக்குப்பதிவு எண்ணிக்கையைத் தொகுக்க 10 நாட்கள் எடுத்துக்கொள்வது குறித்து தேர்தல் ஆணையம் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

மே 4ஆம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கைக்கான தயாரிப்புகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தேர்தல் செயல்முறைகளின் வெளிப்படைத்தன்மை குறித்த விவாதமும் தொடர்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Election Commission released the full data 10 days late Why so late Questions on the Election Commission


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->