மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வரும் தி.மு.க., அரசு, பா.ஜ.,வின் முதுகிற்குப் பின்னால் ஒளிந்து கொள்ளக்கூடாது: த.வெ.க., தலைவர் விஜய்..! 
                                    
                                    
                                   The DMK government which is running an anti people regime should not hide behind the BJP back says Thaveka leader Vijay
 
                                 
                               
                                
                                      
                                            மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வரும் தி.மு.க., அரசு, பா.ஜ.,வின் முதுகிற்குப் பின்னால் ஒளிந்துகொண்டு சமூக அநீதிக்குத் துணை போகக் கூடாது என த.வெ.க., தலைவர் விஜய் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழக அரசு ஒவ்வொரு வகுப்புக்குமான விகிதாசாரப் பிரதிநிதித்துவம் மற்றும் அவர்களின் சமூக நிலை குறித்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வினை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.!
ஜாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தும் மத்திய அரசு. மக்கள் தொகைக் கணக்கெடுப்போடு சேர்த்து, வெறும் கண்துடைப்பு ஜாதிவாரித் தலைக்கட்டுக் கணக்கெடுப்பாக நடத்தக் கூடாது: அனைத்து வகுப்பினருக்கும் இட ஒதுக்கீடு மற்றும் உள்ஒதுக்கீடு முறையாகக் கிடைக்கப் பெறும் வகையில் நடத்த வேண்டும்.

இதற்கென்று அனைத்துச் சமூகத்தின் பிரதிநிதிகளும் உள்ளடங்கிய ஒரு பிரத்தியேக ஆணையம் அல்லது குழு அமைக்க வேண்டும். உரிய தரவுகள் முறையாகவும் முழுமையாகவும் இருக்கும் வகையில் குறிப்பிட்ட கால வரையறை நிர்ணயம் செய்து இந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்போடு சேர்ந்த சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும். அதன் அடிப்படையில் எங்கள் பிரதான கோரிக்கையான விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்படக் கூடாது. மாறாக அனைத்துச் சமூகத்திற்கும் உரிய விகிதாசார அடிப்படையில் அவர்களின் பிரதிநிதித்துவத்தை முன்னிலைப்படுத்துவதாக மட்டுமே இருக்க வேண்டும். இதுவே முழு அளவிலான சமூக நீதி ஆகும். இந்தக் கணக்கெடுப்பின் வாயிலாக உண்மையான சமூக நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.

மக்கள் தொகைக் கணக்கெடுப்போடு சேர்ந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு (Caste Census) நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தாலும், மாநில அரசும் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வை (Caste Survey) நடத்த வேண்டும். அண்டை மாநில அரசுகள் சில தங்களுக்கான அதிகாரங்களைப் பயன்படுத்தி, தன்னிச்சையாக ஜாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வு நடத்தியுள்ளன. இந்த ஆய்வு மீண்டும் நடத்தப்படும் என்று சில மாநில அரசுகள் அறிவித்துள்ளன.
எனவே, தமிழக அரசும் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வு (Caste Survey) நடத்த வேண்டும். அந்த ஆய்வானது. அனைத்துச் சமூகத்திற்குமான பிரதிநிதித்துவத்தையும் சட்டப்படி செல்லத்தக்க, உகந்த உள் ஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையிலான தரவுகளை முழுமையாக உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
 இதைச் செய்யாமல், மாநில அரசுகள் ஜாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டியதில்லை என்கிற மத்திய அரசின் அறிவிப்பைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு. மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வரும் தி.மு.க., அரசு, பா.ஜ.,வின் முதுகிற்குப் பின்னால் ஒளிந்துகொண்டு சமூக அநீதிக்குத் துணை போகக் கூடாது.
அவ்வாறு ஒளிந்துகொண்டு மாநில அரசு ஜாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வை நடத்தாமல் விட்டுவிட்டால், தமிழகத்தில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வுக்கான கோரிக்கை இன்னும் வலுவடையும் என்பதை மறந்துவிட வேண்டாம் என்று அந்த அறிக்கையில் விஜய் கூறியுள்ளார்.
                                     
                                 
                   
                       English Summary
                       The DMK government which is running an anti people regime should not hide behind the BJP back says Thaveka leader Vijay