“காங்கிரஸ் வருத்தப்படக் கூடாது என்பதற்காகவே முதல்வர் விஜய் தலைமையில் தொகுதி மறுவரையறை கூட்டம்!” – விஜய்யை விமர்சித்த கனிமொழி - Seithipunal
Seithipunal


தவெக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி காவிரி விவகாரத்தில் அதிருப்தி அடையக்கூடாது என்பதற்காகவே, முதல்வர் விஜய் திடீரென தொகுதி மறுவரையறை தொடர்பான அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தை கூட்டியதாக திமுக எம்.பி. கனிமொழி விமர்சித்துள்ளார்.

தமிழ்நாட்டின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் எந்தக் காலத்திலும் குறையக்கூடாது என்பதே திமுகவின் உறுதியான நிலைப்பாடு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக முதல்வர் விஜய் தலைமையில் சென்னையில் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மதிமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 19 எம்.பி.க்கள் பங்கேற்றனர்.

அதேவேளையில் திமுக, அதிமுக, பாமக, தேமுதிக மற்றும் மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 37 எம்.பி.க்கள் கூட்டத்தை புறக்கணித்தனர். கூட்டத்தின் முடிவில், தொகுதி மறுவரையறையே மேற்கொள்ளக் கூடாது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை சுட்டிக்காட்டிய கனிமொழி, கடந்த ஆண்டு திமுக தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில், மக்கள் தொகை அடிப்படையில் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படாத வகையில் சமமான தொகுதி மறுவரையறை மேற்கொள்ள வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக குறிப்பிட்டார். ஆனால் தற்போது விஜய் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தொகுதி மறுவரையறையே தேவையில்லை என முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும், இந்த மாற்றத்திற்கான காரணம் குறித்து விளக்கம் அளிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

சென்னையில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி, “ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களிடம் காவிரி விவகாரம் குறித்து பேசுங்கள் என்று கேட்டால், தொகுதி மறுவரையறை குறித்து கூட்டம் நடத்துகிறார்கள். மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிராக அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால் தவெக அரசு அதனை மறுக்கிறது” என்றார்.

இதற்கு காரணமாக, ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள சில கட்சிகள் வருத்தப்படக்கூடாது என்பதுதான் இருக்கலாம் என்றும் அவர் விமர்சித்தார். குறிப்பாக கர்நாடகாவில் ஆட்சியில் இருக்கும் கூட்டணி கட்சிகள் அதிருப்தி அடையக்கூடாது என்பதற்காக காவிரி விவகாரத்தை தவிர்த்து தொகுதி மறுவரையறை குறித்து கூட்டம் நடத்தப்பட்டுள்ளதாக கனிமொழி குற்றம்சாட்டினார்.

மேலும், கடந்த முறை தொகுதி மறுவரையறை மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டபோது, தற்போது இது குறித்து பேசும் தவெக தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

“தொகுதி மறுவரையறை விவகாரத்தில் முதல்முறையாக குரல் கொடுத்த இயக்கம் திமுக. அதன் தலைவர் மு.க.ஸ்டாலின், கர்நாடகா, பஞ்சாப், ஒடிசா உள்ளிட்ட மாநில முதல்வர்கள் மற்றும் பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களை அழைத்து ஆலோசனை நடத்தினார். தமிழக சட்டப்பேரவையிலும் சமமான தொகுதி மறுவரையறையை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது” என கனிமொழி தெரிவித்தார்.

மேலும், தேர்தல் காலத்திலும் நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக திமுக வாக்களித்து அதனை தோற்கடித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

“நாங்கள் எங்கள் கருத்தை ஒருபோதும் மாற்றிக்கொள்ளவில்லை. தமிழ்நாட்டிற்கு எந்தக் காலத்திலும் கிடைத்து வரும் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறையக்கூடாது என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு” என கனிமொழி திட்டவட்டமாக தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The constituency delimitation meeting under Chief Minister Vijay was held solely to ensure the Congress wouldnot feel aggrieved Kanimozhi criticizes Vijay


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...




Seithipunal
--> -->