திமுகவை கார்னர் செய்ய விஜய் போட்ட பிளான்! பந்தை தவெக பக்கமே திருப்பிய திமுக!எம்.பிக்கள் மீட்டிங்கின் பின்னணி என்ன? - Seithipunal
Seithipunal


தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக பாஜகவுடன் இணக்கம் காட்டுவதாகக் கூறப்படும் நிலையில், அதை அரசியல் ரீதியாக வெளிப்படுத்தும் நோக்கத்திலேயே முதல்வர் விஜய் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தை கூட்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இந்த விவகாரத்தை திமுக திறம்பட கையாண்டு, பந்தை மீண்டும் தவெக தரப்புக்கே திருப்பிவிட்டதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

தொகுதி மறுவரையறை மசோதா கொண்டு வரப்பட்டால் தமிழ்நாட்டுக்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து விவாதிப்பதற்காக, முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் திமுக, அதிமுக, பாமக, தேமுதிக மற்றும் மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கவில்லை. காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகளைச் சேர்ந்த 19 எம்.பி.க்கள் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்றதாக கூறப்படுகிறது.

மக்களவைத் தொகுதி மறுவரையறை விவகாரம் தென் மாநிலங்களுக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டால், மக்கள் தொகை கட்டுப்பாட்டை சிறப்பாக செயல்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் நீண்டகாலமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், தொகுதி மறுவரையறை தொடர்பாக மத்திய அரசு சட்டத்திருத்த மசோதாவை கொண்டு வரத் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய அரசுக்கு தேவையான நாடாளுமன்ற ஆதரவைப் பெற திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஆதரவும் முக்கியமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

திமுகவை பொறுத்தவரை, தொகுதி மறுவரையறைக்கு எதிரான நிலைப்பாடு இல்லை என்றும், அது அனைத்து மாநிலங்களுக்கும் நியாயமான முறையில் அமைய வேண்டும் என்பதே தங்களது விருப்பம் என்றும் கூறப்படுகிறது. மேலும், ஒவ்வொரு மாநிலத்திற்கும் எத்தனை நாடாளுமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது குறித்த தெளிவான விவரங்களை மத்திய அரசு முன்கூட்டியே வெளியிட வேண்டும் என்றும் திமுக வலியுறுத்தி வருகிறது.

இதற்கிடையே, தொகுதி மறுவரையறை குறித்து விவாதிக்க முதல்வர் விஜய் அழைப்பு விடுத்த அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன், காவிரி விவகாரத்தில் மேகதாது அணை தொடர்பாக தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும் என திமுக நிபந்தனை விதித்ததாக கூறப்படுகிறது.

“காவிரி விவகாரம் தமிழ்நாட்டின் உயிராதாரப் பிரச்சனை. அதுகுறித்து முதலில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். அதன் பின்னர் தொகுதி மறுவரையறை குறித்து நடைபெறும் ஆலோசனையில் பங்கேற்போம்” என்ற நிலைப்பாட்டை திமுக எடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால், திமுகவை கூட்டத்திற்கு வரவழைத்து அரசியல் ரீதியாக நெருக்கடிக்கு உள்ளாக்கும் தவெக தரப்பின் முயற்சி எதிர்பார்த்தபடி நடைபெறவில்லை என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

திமுக மட்டுமின்றி அதிமுக, பாமக, தேமுதிக, மநீம உள்ளிட்ட கட்சிகளும் கூட்டத்தை புறக்கணித்ததால், இது முழுமையான அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டமாக இல்லாமல் தவெக கூட்டணி மற்றும் அதனை ஆதரிக்கும் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டமாகவே முடிந்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக பாஜகவுடன் நெருக்கமாக இருப்பதாக ஒரு தோற்றத்தை உருவாக்க தவெக தரப்பு முயன்றதாக கூறப்பட்ட நிலையில், காவிரி விவகாரத்தை முன்வைத்து திமுக எடுத்த நிலைப்பாடு அந்த அரசியல் கணக்கை மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், திமுகவை கார்னர் செய்ய விஜய் போட்ட அரசியல் திட்டம் எதிர்பார்த்த அளவுக்கு பலனளிக்கவில்லை என்றும், மாறாக பந்தை மீண்டும் தவெக அரசின் கோர்ட்டுக்கே திமுக திருப்பிவிட்டதாகவும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vijay plan to corner the DMK The DMK turns the tables on TVK What is the backstory behind the MP meeting


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...




Seithipunal
--> -->