“பணத்தால் இங்கு எதையும் செய்ய முடியாது” – மதுவிலக்கு துறையில் மாற்றங்கள் குறித்து அமைச்சர் விக்னேஷ் அதிரடி! - Seithipunal
Seithipunal


மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையில் தமிழக வெற்றிக் கழக அரசு மேற்கொண்டு வரும் மாற்றங்களால் பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தங்களை அணுகி மாற்றங்களை கைவிடுமாறு சிலர் முயற்சி செய்ததாகவும் அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த ஆட்சிக் காலத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றம்சாட்டினார். அவற்றை சரிசெய்யும் வகையில் தற்போது ஒன்றிரண்டு மாற்றங்கள் மட்டுமின்றி பல்வேறு நிர்வாக மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இந்த மாற்றங்களால் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக வர்த்தகம் செய்தவர்கள் முதல் அடிமட்டத்தில் உள்ள சில தொழிலாளர்கள் வரை பலரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

“பெரிய அளவிலான லாபிகள் பல்வேறு வழிகளில் எங்களை அணுக முயன்றனர். பணம் கொடுக்கிறோம், புதிதாக கொண்டு வந்துள்ள அமைப்பை கைவிடுங்கள் என்றும் கூறினர். ஆனால் நாங்கள் எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை” என அமைச்சர் விக்னேஷ் கூறினார்.

தமிழக வெற்றிக் கழக ஆட்சி முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்று வருவதாகவும், பணத்தின் மூலம் அரசின் முடிவுகளை மாற்ற முடியாது என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

“பணத்தை வாங்கிக்கொண்டு இருந்த அமைப்பை கைவிடுவதற்காக நாங்கள் ஆட்சிக்கு வரவில்லை. மாற்றம் வேண்டும் என்பதற்காகத்தான் மக்கள் எங்களை தேர்வு செய்துள்ளனர். அந்த மாற்றத்தை ஏற்படுத்தவே நாங்கள் வந்திருக்கிறோம்” என்றும் அவர் தெரிவித்தார்.

தங்களை அணுகி எதையும் சாதிக்க முடியாதவர்கள் தற்போது அரசுக்கு எதிராக அவதூறு பரப்புவதாகவும் அமைச்சர் குற்றம்சாட்டினார். இதுபோன்ற விமர்சனங்களுக்கு அரசு அஞ்சாது என்றும், மாற்றங்கள் தொடர்ந்து நடைபெறும் என்றும் அவர் கூறினார்.

“அவதூறுக்கும் ஆபாசத்திற்கும் பயப்படுவோம் என்று நினைக்க வேண்டாம். அது தோல்வியைத்தான் தரும். டாஸ்மாக் துறையில் மட்டுமல்லாமல் சுற்றுச்சூழல் துறையிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும்” என அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார்.

மேலும், மதுபான பாட்டில்களில் இடம்பெறும் “மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கு கேடு” என்ற விழிப்புணர்வு வாசகத்தைப் போலவே, டாஸ்மாக் கடைகளின் பெயர்ப்பலகைகளிலும் மதுவால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெறும் என்றும் அவர் கூறினார்.

இதனிடையே, தமிழக அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ள ஆன்லைன் மதுபான முன்பதிவு மற்றும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நடைமுறைக்கும் எதிர்க்கட்சிகள் விமர்சனம் தெரிவித்து வருகின்றன. மதுபானம் வாங்குவதை மேலும் எளிதாக்கும் வகையில் இந்த நடவடிக்கை அமைந்துவிடும் என்றும், மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் இதுபோன்ற திட்டங்களை அரசு ஏன் செயல்படுத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Money cannot accomplish anything here Minister Vignesh makes a bold statement regarding changes in the Prohibition Department


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...




Seithipunal
--> -->