'பரந்தூர் விமான நிலையம் குறித்து தமிழ்நாடு அரசிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை'; மக்களவையில் மத்திய அரசு விளக்கம்..!
The central government has clarified that there is no information from the Tamil Nadu government regarding Paranthur Airport
பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக 2026 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பின் தமிழ்நாடு அரசிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை என மக்களவையில் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
சென்னை அடுத்த பரந்தூரில் பசுமைவெளி விமான நிலையத் திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து மக்களவையில் திமுக எம்பி தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் முரளிதர் மோஹோல் எழுத்துப்பூர்வ பதிலளித்துள்ளார். அதில், ''பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைத் தொடர்வது அல்லது கைவிடுவது தொடர்பாக கடந்த மே மாதத்துக்கு பிறகு தமிழ்நாடு அரசிடமிருந்து அதிகாரப்பூர்வத் தகவலும் வரவில்லை'' எனக் கூறியுள்ளார்.

அத்துடன், பரந்தூரில் சர்வதேச பசுமைவெளி விமான நிலையம் அமைப்பதற்காக தமிழ்நாடு அரசின் டிட்கோ நிறுவனத்திற்கு கடந்த ஆண்டு ஏப்ரல் 07 ஆம் தேதியே கொள்கை அளவிலான ஒப்புதலை வழங்கி விட்டதாகவும் மத்திய இணை அமைச்சர் முரளிதர் மோஹோல் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், பசுமைவெளி விமானநிலையக் கொள்கை படி, திட்டத்தைச் செயல்படுத்தும் முழுப் பொறுப்பும் சம்பந்தப்பட்ட விமான நிலைய மேம்பாட்டாளரையும் மாநில அரசையுமே சாரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதற்காக நிலம் கையகப்படுத்துதல், சட்டப்பூர்வ அனுமதிகள் பெறுதல், நிதி ஆதாரங்களைத் திரட்டுதல் போன்ற காரணிகளைப் பொறுத்தே விமான நிலைய கட்டுமானத்திற்கான காலக்கெடு அமையும் என்றும் மத்திய அரசு தனது எழுத்துப்பூர்வ பதிலில் தெளிவுபடுத்தியுள்ளது.
இதேநேரம், தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையிலும் பரந்தூர் விமான நிலையம் குறித்த எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
English Summary
The central government has clarified that there is no information from the Tamil Nadu government regarding Paranthur Airport