சூடுபிடித்த 2026 தேர்தல் களம்!அதிவேகத்தில் அதிமுக!அரைக் கிணறை தாண்டாத திமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி!
The 2026 election field is heating up AIADMK is in full swing DMK has not crossed the halfway mark Edappadi has completed the sketch he drew
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மாநில அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. இந்த முறை தேர்தலில் ஆளும் திமுக கூட்டணி, அதிமுக–பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் என பல்வேறு அணிகள் களமிறங்குவதால் கடும் போட்டி நிலவி வருகிறது.
திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கட்சிகள் இணைந்துள்ளன. இருப்பினும் அந்த கூட்டணியில் தற்போது வரை முழுமையான தொகுதி ஒதுக்கீடு மற்றும் எந்த கட்சி எந்த தொகுதியில் போட்டியிடும் என்பது போன்ற விவகாரங்கள் இன்னும் இறுதி செய்யப்படாத நிலை உள்ளது.
இதற்கிடையில், மக்கள் நீதி மய்யம் இந்த தேர்தலில் போட்டியிடாது என்று அறிவித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில் இருந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி வெளியேறியதும் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது. மேலும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் கூடுதல் தொகுதிகளை கோரி பேச்சுவார்த்தையில் கடுமையாகப் போராடியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மறுபுறம் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. இந்த கூட்டணியில் தொகுதி பங்கீடு பெரும்பாலும் சுமூகமாக முடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாஜகவுக்கு 27 தொகுதிகள், பாமகவுக்கு 17, அமமுகவுக்கு 11 உள்ளிட்ட ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே கட்சியின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு 23 வேட்பாளர்களை அறிவித்துள்ளார். அதோடு தேர்தல் பிரச்சாரத்தையும் தொடங்கி விட்டார். இதனால் தேர்தல் ரேசில் தற்போதைக்கு எடப்பாடி பழனிசாமி முன்னிலை பெற்றுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் மதிப்பிடுகின்றனர்.
மற்றொரு புறம் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் நிலைப்பாட்டை அறிவித்து வேட்பாளர்களை வெளியிட்டு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். அதேபோல் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் விரைவில் வேட்பாளர் பட்டியலை அறிவித்து பிரச்சாரத்தை தொடங்கும் என கூறப்படுகிறது.
வாக்குப்பதிவிற்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான காலமே உள்ள நிலையில், வேட்பு மனு தாக்கல் அவகாசம் ஏப்ரல் 6ஆம் தேதி நிறைவடைகிறது. அதற்குள் திமுக கூட்டணியில் எந்த கட்சி எந்த தொகுதியில் போட்டியிடும் என்பது குறித்து இறுதி முடிவு எடுக்க வேண்டிய அவசரம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஒருபுறம் பிரச்சாரத்தில் முன்னேறியுள்ள அதிமுக, மறுபுறம் கூட்டணி சமரசங்களில் சிக்கியுள்ள திமுக என தேர்தல் அரசியல் வேகம் எடுத்துள்ள நிலையில், அடுத்த சில நாட்களில் அரசியல் களம் மேலும் பரபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
The 2026 election field is heating up AIADMK is in full swing DMK has not crossed the halfway mark Edappadi has completed the sketch he drew