தவெகவில் சீட் கேட்ட பிரபல இயக்குநர் யார்? புஸ்ஸி ஆனந்த் பேச்சால் லோகேஷ் கனகராஜ் பெயர் அடிபடுகிறதா?
Which famous director sought a seat in TVK Is Lokesh Kanagaraj name being linked to the matter following Pussy Anand remarks
சட்டப்பேரவையில் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பேசிய ஒரு கருத்து, தமிழக அரசியல் மற்றும் திரையுலக வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் விஜய்யை வைத்து படம் இயக்கிய பிரபல இயக்குநர் ஒருவர் தேர்தலில் ஒரு குறிப்பிட்ட தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டதாகவும், ஆனால் அந்தத் தொகுதியை நீண்ட காலமாக கட்சிப் பணியாற்றிய மாவட்டச் செயலாளருக்காக வழங்க மறுத்ததாகவும் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் பேசிய புஸ்ஸி ஆனந்த், தேர்தலின்போது அந்த இயக்குநர் தன்னிடம் ஒரு தொகுதியை கேட்டதாகவும், ஏற்கனவே ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே அந்தத் தொகுதியை கேட்டிருந்ததாக மீண்டும் வந்து தெரிவித்ததாகவும் கூறினார். ஆனால், அந்தத் தொகுதியில் பல ஆண்டுகளாக மாவட்டச் செயலாளர் ஒருவர் பணியாற்றி வருவதால், அவரை தவிர்த்துவிட்டு இயக்குநருக்கு சீட் வழங்க முடியாது என்று தெரிவித்ததாகவும் புஸ்ஸி ஆனந்த் கூறினார்.
இந்தப் பேச்சைத் தொடர்ந்து, தவெகவில் சீட் கேட்ட அந்த இயக்குநர் யார்? என்ற கேள்வி சமூக வலைதளங்களில் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சட்டப்பேரவை நிகழ்வின் வீடியோவை அடிப்படையாகக் கொண்டு சிலர் புதிய யூகத்தை முன்வைத்துள்ளனர். புஸ்ஸி ஆனந்த் அந்த இயக்குநர் குறித்து பேசிக்கொண்டிருந்தபோது, வேளாண் அமைச்சர் வினோத் அருகில் அமர்ந்திருந்த அமைச்சர் விக்னேஷை நோக்கி சைகை செய்ததாகக் கூறப்படுகிறது. விக்னேஷ் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதியின் எம்எல்ஏ என்பதால், கோவையைச் சேர்ந்த விஜய் பட இயக்குநர் என்ற கோணத்தில் லோகேஷ் கனகராஜ் பெயர் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.
லோகேஷ் கனகராஜ், விஜய்யை வைத்து மாஸ்டர், லியோ ஆகிய இரண்டு படங்களை இயக்கியுள்ளார். மேலும், விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்திலும் அவர் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், லோகேஷ் கனகராஜ் உண்மையிலேயே தவெகவில் போட்டியிட சீட் கேட்டாரா? அவர் அரசியலுக்கு வர திட்டமிட்டுள்ளாரா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
ஆனால், புஸ்ஸி ஆனந்த் தனது பேச்சில் அந்த இயக்குநரின் பெயரை வெளிப்படையாக குறிப்பிடவில்லை. எனவே, தற்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் லோகேஷ் கனகராஜ் தொடர்பான தகவல் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படாத யூகமாகவே உள்ளது.
English Summary
Which famous director sought a seat in TVK Is Lokesh Kanagaraj name being linked to the matter following Pussy Anand remarks