கேப்டன் நினைவில் கோயம்பேடு கண்ணீர்…! - விஜயகாந்த் 2-ம் ஆண்டு நினைவு தினத்தில் அரசியல்-திரை உலகம் அஞ்சலி...!
Tears Koyambedu memory Captain Political and film world pay tribute Vijayakanths 2nd death anniversary
திரைத்துறையிலும் அரசியல் களத்திலும் தனித்த முத்திரை பதித்த நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான ‘கேப்டன்’ விஜயகாந்த், கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் 28-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார்.
அவரது மறைவு திரை உலகம், அரசியல் மேடை மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழக மக்களையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியது. அரசு மரியாதையுடன், சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலக வளாகத்தில் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மேலும்,விஜயகாந்தின் நினைவு தினத்தை ஆண்டுதோறும் ‘குருபூஜை’ என்ற பெயரில் தேமுதிக கட்சி மரியாதையுடன் அனுசரித்து வருகிறது. இந்த நிகழ்வில் பங்கேற்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மறைந்த கேப்டன் விஜயகாந்தின் 2-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில், காலை முதலே தேமுதிக தொண்டர்களும், ரசிகர்களும் திரண்டு வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அதேபோல், பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் விஜயகாந்தின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் முதலில் மரியாதை செலுத்த, தொடர்ந்து தமாகா தலைவர் ஜி.கே.வாசனும் அஞ்சலி செலுத்தினார்.
2-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், கருநாகராஜன், நடிகை கஸ்தூரி உள்ளிட்ட பலரும் விஜயகாந்த் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி, திரை உலக பிரபலங்கள், திரைப்பட இயக்குநர்கள், கலைஞர்களும் தொடர்ந்து விஜயகாந்தின் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனிடையே, தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ், விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி, கேப்டனின் நினைவுகளை பகிர்ந்தார்.
English Summary
Tears Koyambedu memory Captain Political and film world pay tribute Vijayakanths 2nd death anniversary