தமிழ்த்தாய் வாழ்த்தே முதலிடம்...அதில் எந்த சமரசமும் இல்லை...! - தமிழக அரசுக்கு வைகோ அதிரடி கோரிக்கை...!
Tamilthai vazhththu comes first there no compromise on that Vaiko demands action from Tamil Nadu government
மும்மொழிக் கொள்கையை தமிழக அரசு எந்த நிலையிலும் ஏற்றுக்கொள்ளக் கூடாது என்றும், தமிழக அரசின் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வந்தே மாதரத்தை முன்னிறுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆனால் தமிழக அரசின் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும்; அதன் பின்னரே தேசிய கீதம் இடம்பெற வேண்டும் என்பதே எங்களது உறுதியான நிலைப்பாடு” என்று தெரிவித்தார்.மேலும், “மும்மொழிக் கொள்கை மூலம் ஒரே மொழி ஆதிக்கத்தை தமிழகத்தில் திணிக்க முயற்சிப்பதை ஏற்க முடியாது.
தமிழின் அடையாளத்தையும் மாநில உரிமைகளையும் பாதுகாப்பதில் எங்களது குரல் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.இதைத் தொடர்ந்து த.வெ.க. ஆட்சி குறித்து பேசிய வைகோ, “புதிய ஆட்சி என்பதால் அவர்களுக்கு அனுபவம் குறைவாக இருக்கலாம். அதனால் ஆறு மாத கால அவகாசம் வழங்க வேண்டும்.
காலப்போக்கில் ஆட்சியின் நுணுக்கங்களையும் நிர்வாக அனுபவங்களையும் அவர்கள் கற்றுக்கொள்வார்கள்” என்றார்.தி.மு.க. மற்றும் காங்கிரஸ் உறவு தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், “காங்கிரஸ் பிரிந்து சென்றதால் தி.மு.க.வுக்கு எந்த அரசியல் பின்னடைவும் ஏற்பட்டதாக நான் கருதவில்லை.
மதச்சார்பின்மையை காக்கும் சக்தி காங்கிரஸ் மட்டுமே அல்ல. மேற்கு வங்க முதல்-அமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் அந்த கொள்கையை பாதுகாத்து வருகின்றனர்” என்று தெரிவித்தார்.மேலும், “இன்ஸ்டாகிராம் மூலமாக த.வெ.க. ஆட்சியை பிடித்துவிட்டதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கூறியிருப்பது அவரது மனநிலையை பிரதிபலிக்கிறது.
அதுகுறித்து நான் எந்த பதிலும் அளிக்க விரும்பவில்லை” என்றும் அவர் கூறினார்.அரசியல் கூட்டணி நிலவரம் குறித்து பேசிய அவர், “அ.தி.மு.க. ஆட்சி அமைக்குமா? தி.மு.க. ஆதரவு தருமா? என்ற குழப்பம் அரசியல் வட்டாரங்களில் நீடித்து வருகிறது. ஆனால் அதுகுறித்து நான் எந்த கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை” என்று கூறினார்.
இறுதியாக மத்திய அரசை விமர்சித்த வைகோ, “ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாசாரம், ஒரே ஆட்சி என்ற சிந்தனையை தமிழகத்தில் கொண்டு வர முயன்றவர்கள் தோல்வியை சந்தித்துள்ளனர்.
கேரளாவிலும் அதே நிலையே உருவாகியுள்ளது. எதிர்காலத்திலும் பா.ஜ.க.வின் அரசியல் திட்டங்களுக்கு எதிராக கடுமையான ஜனநாயகப் போராட்டத்தை முன்னெடுப்போம்” என்று தெரிவித்தார்.
English Summary
Tamilthai vazhththu comes first there no compromise on that Vaiko demands action from Tamil Nadu government