வெற்றி தான் இலக்கு! உத்தரப் பிரதேசத்திலும் தொடரும் காங்கிரஸ் - சமாஜ்வாதி மெகா கூட்டணி!
SP-Congress Alliance Set to Continue for 2027 UP Assembly Elections
அடுத்த ஆண்டு (2027) நடைபெறவிருக்கும் உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. பா.ஜ.க. ஹாட்ரிக் வெற்றியை நோக்கி ஓட, 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமரத் துடிக்கிறது அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி. இந்தச் சூழலில், தனியார் நாளிதழ் நேர்காணல் ஒன்றில் பேசிய சமாஜ்வாதி தலைவரும் எம்பியுமான அகிலேஷ் யாதவ், வரவிருக்கும் பேரவைத் தேர்தலிலும் காங்கிரஸுடனான தங்களது கூட்டணி எவ்வித மாற்றமுமின்றித் தொடரும் என்பதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
அகிலேஷின் அதிரடி வியூகம்: தொகுதிகள் அல்ல, வெற்றி தான் முக்கியம்!
காங்கிரஸுடன் தொகுதிப் பங்கீட்டில் ஏதேனும் இழுபறி அல்லது சிக்கல் எழுமா என்ற கேள்விக்கு, அகிலேஷ் யாதவ் தனது முதிர்ச்சியான அரசியல் பார்முலாவை முன்வைத்தார். அவர் பகிர்ந்த முக்கிய அம்சங்கள்:
கூட்டணித் தர்மம்: "நாங்கள் பல கூட்டணிகளைச் சந்தித்து, அதில் போதிய அனுபவத்தைப் பெற்றிருக்கிறோம். சமாஜ்வாதி கட்சி எப்போதும் தனது தோழமைக் கட்சிகளின் தேவைகளை மதித்து, அவர்களை அரவணைத்துச் செல்லும். நாங்கள் ஒருபோதும் யாருக்கும் துரோகம் செய்ததில்லை."
தொகுதிப் பங்கீட்டுக்கு இடமில்லை: "எதிர்காலக் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் இடங்களுக்காகப் பேரம் பேசுவதை மையமாகக் கொண்டிருக்காது; மாறாக, பா.ஜ.க.வை வீழ்த்தித் தேர்தல் வெற்றியைப் பெறுவதே முதன்மை நோக்கமாக இருக்கும். கடந்த மக்களவைத் தேர்தலிலும் இதே பார்முலாவைத்தான் கடைப்பிடித்தோம், அது இப்போதும் கைகொடுக்கும்."
தமிழ்நாட்டு அரசியலும் அகிலேஷின் கடந்தகால ‘பஞ்ச்’ வசனமும்:
சமீபத்தில் தமிழ்நாட்டில் அரங்கேறிய அரசியல் அதிரடி மாற்றங்கள் இந்த இடத்தில் உற்றுநோக்கத்தக்கவை. தமிழ்நாட்டில் கடந்த 20 ஆண்டுகளாக நீடித்து வந்த திமுக கூட்டணியை முறித்துக் கொண்டு, புதிய அலையை உருவாக்கியுள்ள முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகத்துடன்' காங்கிரஸ் திடீரெனக் கைக்கோர்த்தது.
அப்போது, திமுகவுடன் 'இந்தியா' கூட்டணியில் நீடிக்கும் அகிலேஷ் யாதவ், காங்கிரஸின் இந்தத் திடீர் அரசியல் கட்சித் தாவலைக் கவனித்து, "கடினமான காலங்களில் ஒருவரையொருவர் கைவிடுபவர்கள் நாங்கள் அல்ல" என்று மறைமுகமாக ஒரு போடு போட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
SP-Congress Alliance Set to Continue for 2027 UP Assembly Elections