தஞ்சை மண்ணில் ‘வெல்லும் தமிழ் பெண்கள்’… தி.மு.க. மகளிர் மாநாடு நாளை பிரம்மாண்டம்! - ஸ்டாலின் & உதயநிதி பங்கேற்பு
Tamil Women Triumph Thanjavur DMK Women Conference grand event tomorrow Stalin Udhayanidhi participate
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே, சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் மிகப் பிரமாண்டமாக நடைபெற உள்ள தி.மு.க. டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
“வெல்லும் தமிழ் பெண்கள்” என்ற தலைப்பில் நடைபெறும் இந்த மாநாடு நாளை (திங்கட்கிழமை) கோலாகலமாக தொடங்குகிறது.மாநாட்டுக்கான முன்னேற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பங்கேற்பாளர்கள் அமருவதற்காக 100 ஏக்கர் பரப்பில் பிரம்மாண்டமான இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், வாகனங்கள் நிறுத்துவதற்காக தனியாக 100 ஏக்கர் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் இருந்து ஒரு பூத்துக்கு 10 பேர் வீதம், மொத்தம் 12,500 பூத்துகளில் இருந்து சுமார் 1.25 லட்சம் மகளிர் பிரதிநிதிகள் சீருடையில் பங்கேற்க உள்ளனர்.
மொத்தமாக 1.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மாநாட்டில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர்.
மாநாட்டுக்கு துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தலைமை வகிக்கிறார். முதன்மைச் செயலாளரும் அமைச்சருமான கே.என்.நேரு முன்னிலை வகிக்கிறார்.மாநாட்டுக்காக பிரம்மாண்ட மேடை, மின்விளக்குகள், அரங்குகள், இருக்கைகள் அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
மாநாட்டு திடல் முழுவதும் வாழை மரங்கள், கரும்புகள் கொண்டு பாரம்பரிய அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நடைபெறும் இந்த மாநாடு என்பதால் அரசியல் அரங்கமே தஞ்சை நோக்கி திரும்பியுள்ளது.முதலமைச்சர் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஜனவரி 26-ம் தேதி காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை டிரோன் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. விதிமீறுவோருக்கு கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. மேலும், 5,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மாநாட்டுக்குப் பிறகு ஜனவரி 28-ம் தேதி மீண்டும் தஞ்சாவூர் வரும் முதலமைச்சர், கும்பகோணம் அருகே நடைபெறும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகல்லா மாநாட்டிலும் பங்கேற்க உள்ளார்.
அன்றும் டிரோன் தடை அமலில் இருக்கும்.இதற்கிடையில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தி.மு.க.வில் இணைய உள்ள நிகழ்ச்சியும் மாநாட்டு திடலில் நடைபெறுகிறது.
திருச்சிக்கு விமானத்தில் வரும் முதலமைச்சர், சாலை மார்க்கமாக தஞ்சைக்கு வந்து மதியம் 1 மணிக்கு இணைப்பு விழாவில் கலந்து கொண்டு, ஓய்வுக்குப் பிறகு மாலை 5 மணிக்கு மாநாட்டு மேடையில் தோன்றி உரையாற்றுகிறார். இரவு 7.30 மணிக்கு அவர் புறப்படுகிறார்.
English Summary
Tamil Women Triumph Thanjavur DMK Women Conference grand event tomorrow Stalin Udhayanidhi participate