தமிழக காங்கிரஸ் தலைமை மாற்றம்? சசிகாந்த் செந்தில், ஜோதிமணி, மாணிக்கம் தாகூர்.. தமிழக காங்கிரஸ்-ன் அடுத்த தலைவர் யார்?
Tamil Nadu Congress leadership change Sasikanth Senthil Jyothimani Manickam ThakurWho is the next leader of Tamil Nadu Congress
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்பே, தமிழக காங்கிரஸ் தலைமை மாற்றம் குறித்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு அதிகரித்துள்ளது. தற்போதைய தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அடுத்த தலைவராக வர பலரும் டெல்லியில் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் திமுக–காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீடு நீண்ட இழுபறிக்குப் பிறகே முடிவுக்கு வந்தது. இறுதியில் காங்கிரசுக்கு 28 தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா இடமும் ஒதுக்கப்பட்டது. ஆனால், இந்த ஒப்பந்தத்தில் காங்கிரஸ் மேலிடம் முழுமையாக திருப்தியடையவில்லை என்றும், குறிப்பாக ராகுல் காந்தி அதிருப்தி தெரிவித்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இதன் பின்னணியில் செல்வப்பெருந்தகை தனது பதவியை விலகத் தயாராக இருப்பதாகவும், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ராஜினாமா கடிதத்தை சமர்ப்பிக்குமாறு மேலிடம் அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. 2027 வரை பதவிக்காலம் இருந்தபோதும் முன்கூட்டியே விலகும் நிலை உருவானது கட்சிக்குள் கேள்விகளை எழுப்பியுள்ளது.
காங்கிரஸ் கட்சியில் மாநிலத் தலைமைப் பொறுப்பில் ராகுல் காந்தியின் நம்பிக்கைக்குரியவர்களை அமர்த்தும் முயற்சி நடைபெற்று வருவதாகக் கூறப்படும் நிலையில், தமிழகத் தலைமைப் பொறுப்புக்கான போட்டி தீவிரமடைந்துள்ளது.
ஒருபுறம், கார்த்தி சிதம்பரம், செல்லகுமார், விஸ்வநாதன் உள்ளிட்டோர் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் ஆதரவைப் பெற முயற்சித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மறுபுறம், ராகுல் காந்தியுடன் நெருக்கம் கொண்ட ஜோதிமணி, மாணிக்கம் தாகூர், சசிகாந்த் செந்தில் ஆகியோரும் தலைமைப் பதவிக்கான போட்டியில் முன்னிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
கட்சித் தலைமையில் மீண்டும் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க முடிவு செய்யப்பட்டால், ராகுல் காந்தியின் விருப்பத் தேர்வாக சசிகாந்த் செந்தில் இருக்கலாம் என பேசப்படுகிறது. அதேசமயம், பெண் தலைவரை தேர்வு செய்யும் சூழல் உருவானால் ஜோதிமணிக்கு வாய்ப்பு அதிகம் எனக் கூறப்படுகிறது.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழக காங்கிரஸ் அமைப்பு குறித்து விரிவான ஆலோசனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கூட்டணி அரசியலில் திமுகவுக்கு மிக நெருக்கமாக செயல்பட்டதாக கருதப்படும் சில நிர்வாகிகளுக்கு இம்முறை தலைமை வாய்ப்பு கிடைக்காமல் போகலாம் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனால், தமிழக காங்கிரஸின் அடுத்த தலைவராக யார் வரப்போகிறார் என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Tamil Nadu Congress leadership change Sasikanth Senthil Jyothimani Manickam ThakurWho is the next leader of Tamil Nadu Congress