'தவெக கூட்டணிக்கு மேலும் சில கட்சிகள் வரவுள்ளன; எத்தனை சவால்கள் வந்தாலும் எதிர்கொள்ள தயார்'; முதலமைச்சர் விஜய் பேச்சு..!
Chief Minister Vijay says that some more parties are coming to the TVK alliance
தவெக தலைவரும், முதலமைச்சருமான ச. ஜோசப் விஜய் தலைமையில், தவெகவின் தோழமைக் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று கோவளத்தில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் பேசும் போது தவெக கூட்டணிக்கு மேலும் சில கட்சிகள் வர உள்ளதாக கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், விசிக, காங்கிரஸ், ஐ.யு.எம்.எல். ஆகியவை பங்கேற்றன. அப்போது விஜய் பேசுகையில், தவெக தோழமைக் கட்சிகளின் செயல்பாடுகளை சரியாக ஒருங்கிணைக்க ஒரு ஒருங்கிணைப்புக் குழு உருவாக்க வேண்டும் எனவும், குறைந்தபட்ச செயல்திட்டம் உருவாக்க வேண்டும் எனவும் பேசியதாக கூறப்படுகிறது.

அத்துடன், தவெக தலைமையில் அமைந்துள்ள இந்தக் கூட்டணிக்கு தன்னிடம் ஒரு பெயர் இருப்பதாகவும், அதனை விரைவில் அறிவிக்க இருப்பதாகவும் கூட்டத்தில் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன், இன்னும் பல கட்சிகள் தவெக கூட்டணிக்கு வர உள்ளதாக கூறியதாகவும் தெரிய வருகிறது.
அத்துடன், பல ஆண்டுகளுக்கு இந்தக் கூட்டணி நிலைத்து நிற்கும் என்றும், எத்தனை சவால்கள் வந்தாலும் இந்த அரசு எதிர்கொள்ள தயாராக இருக்கிறது என்றும், இன்னும் சில மாதங்களில் இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும் என்றெல்லாம் சிலர் சொல்கிறார்கள். ஆனால் அதைப் பற்றி எல்லாம் கூட்டணி கட்சியினர் கவலைப்பட வேண்டாம் என்றும், ஐந்து ஆண்டுகள் இந்த ஆட்சி தொடரும் என நம்பிக்கையூட்டி பேசியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
English Summary
Chief Minister Vijay says that some more parties are coming to the TVK alliance