தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய் தலைமையில் இன்று புதிய தோழமைக்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம்...! புதிய கூட்டணி பெயர் என்ன...?
Tamil Nadu Chief Minister C Joseph Vijay chair consultative meeting new alliance parties today What name new alliance
தமிழக அரசியல் களத்தில் இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள சி.ஜோசப் விஜய் தலைமையிலான த.வெ.க., சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சிப் பொறுப்பை ஏற்று புதிய அரசியல் வரலாற்றை படைத்துள்ளது. இந்த வெற்றி, தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாக பார்க்கப்படுகிறது.தேர்தலுக்கு முன்பே த.வெ.க.வுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளுக்கு ஆட்சி மற்றும் அதிகாரத்தில் முக்கிய பங்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், அப்போது எந்த அரசியல் கட்சியும் வெளிப்படையாக கூட்டணியில் இணைய முன்வரவில்லை. ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியானதும் அரசியல் சமன்பாடுகள் வேகமாக மாறின. முதலாவதாக காங்கிரஸ் கட்சி த.வெ.க.வுக்கு ஆதரவு தெரிவித்து கூட்டணியை உறுதிப்படுத்தியது.அதனைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் த.வெ.க. அணியில் இணைந்தன. சமீபத்தில் ம.தி.மு.க.வும் இந்த கூட்டணியில் இடம்பிடித்துள்ளது. இதற்கிடையில், அ.தி.மு.க.வைச் சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து த.வெ.க.வில் இணைந்து வருவது அரசியல் அரங்கில் பரபரப்பை அதிகரித்துள்ளது.

கூட்டணியை வலுப்படுத்தும் விஜய்
ஆட்சிக்கு ஆதரவு அளித்து வரும் கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைத்து, வலுவான அரசியல் அமைப்பாக மாற்றும் முயற்சியில் முதலமைச்சர் விஜய் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அடுத்த 5 ஆண்டுகள் ஆட்சியை எந்த தடையும் இன்றி முன்னெடுத்து செல்ல கூட்டணியை மேலும் பலப்படுத்த திட்டமிட்டுள்ளார்.இதற்காக, சென்னையை அடுத்த கோவளத்தில் உள்ள பிஷர்மேன்ஸ் கோவ் ரிசார்ட்டில், முதலமைச்சரும் த.வெ.க. தலைவருமான விஜய் தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் இன்று (புதன்கிழமை) மாலை 4 மணியளவில் நடைபெறுகிறது. ஆட்சி அமைந்த பிறகு த.வெ.க. தலைமையில் நடைபெறும் முதல் முக்கிய கூட்டமாக இது கவனம் பெற்றுள்ளது.
கூட்டணிக்கு புதிய அடையாளம்
இந்த கூட்டத்தில், ஆட்சி அமைப்பதற்கும் நிர்வாகத்தை சீராக நடத்துவதற்கும் தொடர்ந்து ஆதரவு வழங்கி வரும் தோழமைக்கட்சித் தலைவர்களுக்கு முதலமைச்சர் விஜய் நேரில் நன்றி தெரிவிக்க உள்ளார்.அதேபோல், த.வெ.க. தலைமையில் வலுவான மற்றும் கட்டமைப்பான மதச்சார்பற்ற கூட்டணியை அதிகாரப்பூர்வமாக உருவாக்குவது குறித்தும் விரிவான ஆலோசனைகள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கூட்டணிக்கான பெயர் அறிவிப்பும் இந்த கூட்டத்தின் முக்கிய அம்சமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.‘மதச்சார்பற்ற சமூகநீதி கூட்டணி’, ‘தமிழ்நாடு முற்போக்கு சமூகநீதி கூட்டணி’ போன்ற பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த கூட்டத்தில் காங்கிரஸ், வி.சி.க., ம.தி.மு.க., ஐ.யூ.எம்.எல். ஆகிய கட்சிகள் பங்கேற்க உள்ளன. த.வெ.க. அரசுக்கு வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு வழங்கும் நிலைப்பாட்டில் உள்ள இடதுசாரி கட்சிகள், இந்த கூட்டத்தில் பங்கேற்கமாட்டோம் என தெரிவித்துள்ளன.மேலும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களும் இதில் கலந்துகொள்ள உள்ளனர்.
முக்கிய விவாதங்கள் என்ன?
இந்த கூட்டத்தில் கூட்டணிக்கென தனி ஒருங்கிணைப்பாளர்களை நியமிப்பதுடன், வழிகாட்டுதல் குழுவை அமைக்கும் முடிவும் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தல்கள் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களை கூட்டணி கட்சிகள் இணைந்து எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும் முக்கிய ஆலோசனைகள் நடைபெற உள்ளன.மேலும், காவிரி விவகாரம், மேகதாது அணை பிரச்சினை, இருமொழிக் கொள்கை உள்ளிட்ட மாநில உரிமை சார்ந்த முக்கிய பிரச்சினைகளில் ஒருங்கிணைந்த நிலைப்பாட்டை உருவாக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.அதோடு, கூட்டணி கட்சிகளின் முக்கிய கோரிக்கைகள் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றியும் விரிவாக ஆராயப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Tamil Nadu Chief Minister C Joseph Vijay chair consultative meeting new alliance parties today What name new alliance