தமிழுக்குத் தொண்டு செய்த கவிஞருக்கு உயரிய கௌரவம்...! புவியரசு உடலுக்கு அரசு மரியாதை செலுத்த முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு...!
high honor poet who served Tamil Chief Minister Vijay orders pay state tribute Earthly Body
தமிழ் இலக்கிய உலகில் அழியாத தடம் பதித்த கவிஞரும் எழுத்தாளருமான புவியரசு, வயது முதிர்வு காரணமாக 96-ஆவது வயதில் நேற்று காலமானார். இருமுறை சாகித்ய அகாடமி விருது பெற்ற அவர், ‘வானம்பாடி’ இயக்கத்தின் முன்னோடி படைப்பாளிகளில் ஒருவராகவும் தமிழ் இலக்கியத்தின் தனித்துவமான குரலாகவும் திகழ்ந்தார்.
அவரது மறைவு தமிழ் மொழிக்கும் இலக்கிய உலகிற்கும் பேரிழப்பாக பார்க்கப்படுகிறது.புவியரசின் இறுதிச்சடங்கு இன்று பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள பிரிக்கால் எரியூட்டு மயானத்தில் நடைபெறுகிறது. அவரது மறைவுக்கு இலக்கியவாதிகள், அரசியல் தலைவர்கள், சமூக அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், முதல்-அமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை பெரும் கவனம் பெற்றுள்ளது.அந்த இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,"சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிஞரும் எழுத்தாளருமான திரு. புவியரசு மறைந்த செய்தி என்னை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
சமூகப் பொறுப்புணர்வை வலியுறுத்தும் அவரது கவிதைகள் மற்றும் உலக இலக்கியங்களை தமிழுக்கு கொண்டு வந்த மொழிபெயர்ப்புகள், தமிழ் இலக்கியத்தில் தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியுள்ளன.‘கையொப்பம்’ கவிதைத் தொகுப்புக்காக தமிழுக்கான சாகித்ய அகாடமி விருதையும், ‘புரட்சிக்காரன்’ மொழிபெயர்ப்பு நூலுக்காக மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதையும் பெற்றவர் புவியரசு. இதனுடன் பல்வேறு உயரிய விருதுகளாலும் அவர் கவுரவிக்கப்பட்டுள்ளார்.
அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி
கவிஞர் புவியரசின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடுசெய்ய முடியாத மிகப்பெரிய இழப்பாகும். அவரது மறைவால் துயரத்தில் வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தமிழ் இலக்கிய உலகைச் சேர்ந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இலக்கிய உலகிற்காக அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பை போற்றும் வகையில், கவிஞர் புவியரசின் இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
English Summary
high honor poet who served Tamil Chief Minister Vijay orders pay state tribute Earthly Body