மத்திய அரசுக்குத் தமிழக சட்டமன்றம் கடும் அழுத்தம்...! வெளிநாட்டு பங்களிப்பு சட்டத் திருத்தத்தை திரும்பப் பெறக் கோரி தீர்மானம்...!
Tamil Nadu Assembly puts heavy pressure Central Government Resolution demanding withdrawal Foreign Contribution Amendment Act
தமிழக சட்டசபையில் வெளிநாட்டு பங்களிப்பு தொடர்பான திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது. பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இந்த தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார்.அப்போது அவர், வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த மசோதா, 2026-ன் தற்போதைய விதிமுறைகள் குறித்து தமிழக அரசு மற்றும் சட்டமன்றத்தின் சார்பில் பல்வேறு கவலைகள் இருப்பதாக தெரிவித்தார்.

வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள தொண்டு நிறுவனங்களின் பதிவு காலாவதியாகும் நிலை, புதுப்பிக்கப்படாதது, புதுப்பிப்புக்கு மறுப்பு தெரிவிப்பது, பதிவு ரத்து செய்யப்படுவது அல்லது பதிவு ஒப்படைக்கப்படுவது போன்ற சூழல்களில், அந்த நிறுவனங்களின் சொத்துகளை அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான விதிகள் மசோதாவில் இடம்பெற்றுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இத்தகைய நடைமுறைகள் தொண்டு நிறுவனங்களின் சுயாட்சியையும், அவற்றின் சொத்துகளை நிர்வகிக்கும் உரிமையையும் பாதிக்கும் வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்தார்.குறிப்பாக சிறுபான்மையினரால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்கள், சமூகநல அமைப்புகள் மற்றும் பிற தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகளில் இந்த மாற்றங்கள் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், இதுகுறித்து விரிவான பரிசீலனை அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மசோதாவின் தற்போதைய வடிவம் பல்வேறு தரப்பினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதனை அவசரமாக நடைமுறைப்படுத்தாமல் திரும்பப் பெற வேண்டும் என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.மேலும், மாநில அரசுகள், தொண்டு நிறுவனங்கள், மத அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவ அமைப்புகள் மற்றும் சமூகநல அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து தொடர்புடைய தரப்பினருடனும் விரிவான கலந்தாலோசனை மேற்கொண்ட பிறகே இதுபோன்ற சட்டத் திருத்தங்களை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
எந்தவொரு சட்டத் திருத்தமும் இயற்கை நீதி, விகிதாசாரக் கோட்பாடு, சொத்துரிமை பாதுகாப்பு, நியாயமான எதிர்பார்ப்பு மற்றும் கூட்டாட்சித் தத்துவம் ஆகிய அடிப்படைகளை உறுதி செய்யும் வகையில் அமைய வேண்டும் என்றும் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது.அதே நேரத்தில், வெளிநாட்டு நிதி வரவு மற்றும் அதன் பயன்பாட்டில் வெளிப்படைத்தன்மையும் பொறுப்புணர்வும் நிலைநிறுத்தப்பட வேண்டும்.
அதேசமயம், சட்டத்துக்கு உட்பட்டு செயல்படும் தொண்டு, கல்வி, மருத்துவம், மதம், கலாசாரம் மற்றும் சமூகநல அமைப்புகளின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த மசோதா, 2026-ஐ அதன் தற்போதைய வடிவிலேயே திரும்பப் பெற வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் உரிய ஆலோசனை நடத்தி, அவர்களின் கருத்துகளைப் பரிசீலித்த பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசை தமிழக சட்டசபை ஒருமனதாக வலியுறுத்தியது.இவ்வாறு தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Tamil Nadu Assembly puts heavy pressure Central Government Resolution demanding withdrawal Foreign Contribution Amendment Act