திமுக–காங்கிரஸ் கூட்டணியில் புயல்?கனிமொழி கையில் 28 சீட் லிஸ்ட்!காங்கிரஸை அதிரவிட்ட ஸ்டாலினின் "மெசேஜ்".. டெல்லியின் பச்சை சிக்னல்? - Seithipunal
Seithipunal


2026 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக மற்றும் காங்கிரஸ் இடையே “ஆட்சியில் பங்கு” குறித்த விவகாரம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா டுடே வட்டமேசை மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கள் இந்த விவாதத்திற்கு மேலும் தீனி போட்டுள்ளன.

அந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், “தமிழ்நாட்டிற்கு ஆட்சியில் பங்கு என்பது ஒத்து வராது என்பது எங்களுக்கும் தெரியும்; காங்கிரஸுக்கும் தெரியும். இது சிலர் கிளப்பும் பிரச்சனை. கூட்டணியில் முறைப்பு ஏற்படுமா என்று திட்டமிட்டு சதி செய்கிறார்கள். அதைப் பற்றி நாங்களும் கவலைப்படவில்லை; ராகுல் காந்தியும் கவலைப்படவில்லை” என்று தெளிவாகக் கூறினார்.

மேலும், ராகுல் காந்தியுடன் உள்ள உறவைப் பற்றி உணர்ச்சிபூர்வமாகப் பேசிய அவர், “அரசியலைத் தாண்டி, அவர் என்னை ஒரு மூத்த சகோதரராக பார்க்கிறார்; நானும் அவரை அப்படித்தான் பார்க்கிறேன்” என்றார். இந்த உரை அரசியல் ரீதியாகவும், மனிதநேய ரீதியாகவும் கவனம் பெற்றது.

ஆனால், அதற்குப் பிறகு காங்கிரஸ் தரப்பில் இருந்து வந்த சில கருத்துகள் கூட்டணிக்குள் விரிசல் ஏற்பட்டதா என்ற கேள்வியை எழுப்பின. காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், “கூட்டணி ஆட்சியா? அல்லது ஒரு கட்சி ஆட்சியா? என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள். 2006-ல் மக்கள் தீர்ப்பை செயல்படுத்தாதது தவறாக இருக்கலாம்” என்ற பதிவை வெளியிட்டது அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதேபோல், காங்கிரஸ் வட்டாரத்தில் நெருக்கமானவராக கருதப்படும் பிரவீன் சக்கரவர்த்தி, “போலியான தனித்துவம் என்ற பெயரில் ஏன் ஒளிய வேண்டும்?” என்ற கருத்தை வெளியிட்டது திமுகவின் நிலைப்பாட்டை மறைமுகமாக விமர்சிப்பதாக பார்க்கப்பட்டது.

இந்த நிலைமை திமுக தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை அழைத்து, மேலிடம் ஏன் இதற்கு விளக்கம் அளிக்கவில்லை என்று முதல்வர் கேள்வி எழுப்பியதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, திமுக நிலைப்பாட்டை ராகுல் காந்தியிடம் தெளிவுபடுத்தும் முயற்சியில் எம்பி கனிமொழி முக்கிய பங்காற்றலாம் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. “ஆட்சியில் பங்கு இல்லை” என்ற நிலைப்பாட்டைத் திமுக தொடரும் என்றும், காங்கிரஸுக்கு 28–30 தொகுதிகள் வழங்கும் முன்மொழிவு இருக்கலாம் என்றும் பேசப்படுகிறது.

ஒருபுறம் செல்வப்பெருந்தகை திமுகவுடன் இணக்கமான நிலைப்பாட்டை வெளிப்படுத்தினாலும், 1967க்குப் பிறகு காங்கிரஸ் ஆட்சியில் அமர முடியாத ஆதங்கத்தையும், 2006-ல் வாய்ப்பு இழந்ததையும் அடிக்கடி நினைவூட்டுகிறார். மறுபுறம், விசிக தலைவர் திருமாவளவன், “ஆட்சியில் பங்கு கோருவது ஜனநாயக உரிமை” என்றாலும், திமுக கூட்டணி வலிமையானது என்றும் கூறியுள்ளார்.

இந்த சூழலில், இறுதி முடிவு ராகுல் காந்தியின் கையில் உள்ளது என அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன. கனிமொழி–ராகுல் சந்திப்பு நடந்த பின் கூட்டணி உறவு தெளிவாகுமா, அல்லது காங்கிரஸ் மாற்று பாதையைத் தேர்வுசெய்யுமா என்பது தெரியவரும். அதுவரை, தமிழக அரசியலில் இந்த விவகாரம் சலசலப்பை தொடர்ச்சியாக உருவாக்கும் என்பது உறுதி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Storm in DMK Congress alliance Kanimozhi has 28 seat list! Stalin message that shook the Congress


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->