கரூர் மாநகராட்சி கூட்டத்தில் ஸ்டாலின் படத்தை வைத்த மண்டல தலைவர்; அதிமுக, காங். கவுன்சிலர்கள் கட்சி தலைவர்களின் புகைப்படத்துடன் வந்ததால் பரபரப்பு..!
Stir caused by the display of Stalins portrait at the Karur Corporation meeting
கரூர் மாநகராட்சி சாதாரண மற்றும் அவசரக் கூட்டம், இன்று முற்பகல் 11.30 மணிக்கு, மாநகராட்சி மேயர் கவிதா தலைமையில் மாநகராட்சி கூட்ட அரங்கில்நடைபெற்றது. கூட்டத்தில் ஆணையர் எம்.பிரித்விராஜ், துணை மேயர் ப.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டம் தொடங்குவதற்கு முன்பு, கரூர் மாநகராட்சி கூட்ட அரங்கில் முதல்வர் விஜய் படம் மட்டும் மாட்டப்பட்டிருந்த நிலையில் கரூர் மாநகராட்சி 01வது மண்டலக்குழுத் தலைவரான சக்திவேல் முதல்வர் விஜய் படம் அருகே முன்னாள் முதல்வர் ஸ்டாலின் படத்தை மாட்டினார்.

அத்துடன், அவரது இருக்கை அருகேயுள்ள மேஜையில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி படத்தை வைத்திருந்தார். இதையடுத்து கூட்டம் தொடங்கிய உடன், அதிமுக கவுன்சிலர்கள் தினேஷ், சுரேஷ் ஆகியோர் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் படம் மாட்டியிருப்பதால், முன்னாள் முதல்வர் பழனிசாமி படத்தை மாட்டவேண்டும் எனக்கூறியுள்ளார்.
அத்துடன், பழனிசாமி படம், சுத்தியலுடன் மாநகராட்சி கூட்ட மேடை மீது ஏறினர். அப்போது அவரை திமுக மண்டலக்குழு தலைவர் சக்திவேல், கவுன்சிலர்கள் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளும், பதற்றமும் ஏற்பட்டது.
அடுத்ததாக, காங்கிரஸ் கவுன்சிலர் ஸ்டீபன்பாபு காமராஜர் படத்துடன் வந்து, காமராஜர் படத்தை வைக்க வேண்டும் என்று அவரும் வந்து நின்றுள்ளார். அதற்கும் திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து கவுன்சிலர்கள் கீழே செல்லாவிடில் சஸ்பெண்ட் செய்யப்படுவீர்கள் என மேயர் எச்சரித்ததை அடுத்து அனைவரும் மேடையை விட்டு கீழே இறங்கியுள்ளனர்.

இதனையடுத்து, மாநகராட்சி கூட்டரங்கில் ஸ்டாலின் படத்தை வைப்பதற்கு ஆதரவு தெரிவிக்கக் கூறியபோது 40க்கும் மேற்பட்ட திமுக கவுன்சிலர்கள் கையை உயர்த்தினர். மறுபுறம் பழனிசாமி படத்தை வைப்பதற்கு ஆதரவு குறித்து கேட்டதற்கு அதிமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என்று தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து மேயர் கவிதா, மாநகராட்சி ஆணையர் எம்.பிரித்விராஜுடன் அவரது அறையில் சிறிது நேரம் ஆலோசனை நடத்தியா பின்னர் மீண்டும் கூட்டம் தொடங்கியது. அப்போது சாதாரண கூட்டத்தில் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. முதல் தீர்மானம் மட்டும் ஒத்திவைக்கப்பட்டு மற்ற 17 தீர்மானங்களும், அவசரக்கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதில் அவசரக்கூட்டத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ள மனை பிரிவு ஒப்புதல் அளிக்கும் தீர்மானத்தை ஒத்தி வைக்கவேண்டும் என அதிமுக கவுன்சிலர் சுரேஷ் தெரிவித்தார். அத்துடன், தேர்தல் நேரத்தில் தனது வார்டில் நடந்த சாலை, சாக்கடை கட்டும் பணிகள் நிறுத்தப்பட்டுவிட்டதாகவும், கல்வெர்ட் பாலங்கள் உயரமாக இருப்பதால் விபத்துகள் ஏற்படுவதாக தெரிவித்தார்.
அடுத்ததாக மா.கம்யூனிஸ்ட் கவுன்சிலர் தண்டபாணி, 41-வது வார்டில் நாய்கள் தொல்லை அதிகரித்துவிட்டதாகவும், இரவு நேரங்களில் 20, 30 நாய்கள் சேர்ந்து இருப்பதால் பெண்கள், முதியவர்கள் அச்சமடைந்து வருகின்றனர். பள்ளிகள் தொடங்கிவிட்டதால் குழந்தைகள் பள்ளி சென்று திரும்புகையில் நாய்களைக் கண்டு அச்சமடைகின்றனர். எனவே அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். அதனைத்தொடர்ந்து மாநகராட்சி அதிகாரி, விதிகளின்படி நாய்த் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
English Summary
Stir caused by the display of Stalins portrait at the Karur Corporation meeting