5வது ஆண்டில் அடியெடுத்து வைத்து... இலக்கை நோக்கி திராவிட மாடல் அரசு...! - முதலமைச்சர் மு.க ஸ்டாலின்
Stepping into 5th year Dravidian model government towards its goal Chief Minister MK Stalin
சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கலைவாணர் அரங்கில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத்துறையினர் சந்திப்பு நிகழ்ச்சியில் உரையாற்றினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:
அப்போது அவர் கூறியதாவது,"2021-ல், தமிழ்நாட்டில் மக்களுடைய நம்பிக்கையையும், ஆதரவையும் பெற்று, 6 -வது முறையாக திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைந்தது. மே 7-ஆம் நாள் நான் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டேன். நாளைக்கு மே 7. திராவிட மாடல் அரசு 5 -வது ஆண்டில் அடியெடுத்து வைக்கப்போகிறது.
தேர்தல் அறிக்கையில் சொன்ன பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம். தேர்தல் அறிக்கையில் சொல்லாத பல திட்டங்களையும் தொலைநோக்குப் பார்வையோடு அதையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு நாளும், புதிய புதிய திட்டங்களை அறிவிக்கிறோம் – நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.
ஒவ்வொரு நாளும் சாதனைத் திட்டத்தின் தொடக்கத்திற்கான நாளாக இருந்து கொண்டிருக்கிறது என்பதை உங்களுக்கெல்லாம் நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கெல்லாம் நன்றாக தெரியும்! தமிழ்நாட்டை மீண்டும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு போகவேண்டும் என்ற எண்ணம்தான் எனக்குள் இருந்தது. சரியான இலக்கை நிர்ணயித்து, அதனை நோக்கி உறுதியாக பயணித்து, நிச்சயம் சாதிக்க முடியும் என்பதற்கு இந்த 4 ஆண்டு கால திராவிட மாடல் அரசே சாட்சியாக அமைந்திருக்கிறது!
இந்த நான்காண்டுகளில் எப்படிப்பட்ட நெருக்கடிகள் எல்லாம் வந்தது. எவ்வளவு அவதூறுகள் பரப்பப்பட்டது என்பது வேறு யாரையும் விட உங்களுக்கு நன்றாக தெரியும். இருந்தாலும், எந்த இடத்திலும், நாங்கள் கொள்கையில் தடம் மாறவில்லை! எந்தச் சூழ்நிலையிலும் மக்களுக்கான சேவைகளை வழங்குவதில் நாங்கள் சோர்ந்து போகவில்லை!
அதனுடைய வெளிப்பாடுதான் நம்முடைய அரசின் முத்திரைத் திட்டங்கள்…
- கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்
- விடியல் பயணம் திட்டம்
- முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்
- புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டங்கள்
- நான் முதல்வன் திட்டம்
என்று ஏராளமான திட்டங்களை வரிசைப்படுத்தி சொல்லிக் கொண்டே இருக்க முடியும்!இந்தத் திட்டங்களை பற்றியெல்லாம், இங்கு வந்திருக்கும் முக்கியமான துறை அமைச்சர்கள் விளக்குவார்கள். அதேபோல், அதிகாரிகளும் அதைப்பற்றி விளக்கி தெரிவிப்பார்கள்.
உங்களுக்கு என்னுடைய அன்பான வேண்டுகோள் என்ன என்றால்...இந்தியாவிற்கே முன்மாதிரியாக பல திட்டங்களைச் செயல்படுத்திக்கொண்டு இருக்கிறோம். நம்முடைய திட்டங்களை பார்த்து, பல்வேறு மாநில அரசுகள் அந்த திட்டங்களை அவர்கள் மாநிலங்களிலும் செயல்படுத்துகிறார்கள்.அப்படிப்பட்ட திட்டங்களை, நீங்கள் மனப்பூர்வமாக பாராட்டவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
விமர்சிக்க வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. என்னுடைய 60 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையே விமர்சனங்களால் செதுக்கப்பட்டிருப்பது.உங்களுக்கு தெரியும். எனவே, நம்முடைய அரசின் திட்டங்களை இன்னும் செம்மைப்படுத்துவதற்கான கருத்துகள் – ஆலோசனைகள் இருந்தால் நீங்கள் எடுத்துச் சொல்லுங்கள்… அந்த திட்டங்களை இன்னும் சிறப்பாக செயல்படுத்துவோம்!
உங்களோடு இணைந்து, தமிழ்நாட்டின் பொற்காலத்தை தொடர்வோம்! தொடர்வோம்! தொடர்வோம்!" எனத் தெரிவித்துள்ளார்.இதற்கு எதிர்க்கட்சிகள் பல விமர்சனங்களை முன் வைத்து வருகிறது.
English Summary
Stepping into 5th year Dravidian model government towards its goal Chief Minister MK Stalin