இலங்கைத் தமிழர் உரிமைகள் ஆபத்தில்...! பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் ...! - Seithipunal
Seithipunal


இலங்கையில் முன்மொழியப்பட்ட அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் இலங்கைத் தமிழ்ச் சமூகத்திற்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.அந்தக் கடிதத்தில், இலங்கைத் தமிழர்களின் அரசியல் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் எதிர்காலம் குறித்து ஆழ்ந்த கவலை இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வரலாற்று, கலாச்சார மற்றும் உணர்வுப் பிணைப்புகளால், இலங்கைத் தமிழர்களின் உரிமைகளை பாதுகாப்பதில் தமிழ்நாடு எப்போதும் முன்னணியில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்போது நடைபெறும் அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள், தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை புறக்கணித்து, மீண்டும் ஒரு ஒற்றையாட்சி “எக்கியராஜ்ய” முறைமைக்கு வலு சேர்ப்பதாகத் தெரிகிறது என்றும், இது தமிழ் மக்களை மேலும் ஓரங்கட்டும் நிலையை உருவாக்கும் என்றும் முதலமைச்சர் எச்சரித்துள்ளார்.

கடந்த 77 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கைத் தமிழர்கள் பாகுபாடு, ஒடுக்குமுறை, வன்முறை ஆகியவற்றைச் சந்தித்து வருவதாகவும், உள்நாட்டுப் போர் முடிவடைந்த பின்னரும், நில அபகரிப்புகள், மக்கள்தொகை மாற்றங்கள், தமிழ் அடையாளச் சிதைவு தொடர்வதாகவும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

மேலும், திம்பு கோட்பாடுகள் அடிப்படையில் தமிழர்களின் தனித்துவமான தேசிய அடையாளம்,வடக்கு–கிழக்கு மாகாணங்களை பாரம்பரியத் தாயகமாக அங்கீகரித்தல்,அரசியல் தன்னாட்சி,சிறுபான்மையினரின் உரிமைகளை உறுதிப்படுத்தும் கூட்டாட்சி ஆட்சி முறை ஆகியவை அடங்கிய அரசியலமைப்பே நிலையான தீர்வாக இருக்கும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த அம்சங்களை புறக்கணிக்கும் எந்த புதிய அரசியலமைப்பும், நிலையற்ற தன்மை, மீண்டும் மோதல்கள் மற்றும் மனிதாபிமான நெருக்கடிகளுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.1987 இந்தியா–இலங்கை ஒப்பந்தம் உள்ளிட்ட வரலாற்றுப் பின்னணியை சுட்டிக்காட்டிய முதலமைச்சர், இலங்கையில் அமைதி மற்றும் நீதியை நிலைநிறுத்த இந்தியாவுக்கு தார்மீகப் பொறுப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

எனவே, இலங்கை அதிகாரிகளுடன் இந்தியா உயர்மட்ட தூதரக பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு, மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வு, சிறுபான்மையினரின் உரிமைப் பாதுகாப்பு மற்றும் கூட்டாட்சி கொள்கைகளை உறுதி செய்ய வேண்டும் என பிரதமரிடம் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

பிரதமர் மோடியின் தலைமையில், இலங்கைத் தமிழர்களுக்கு நியாயமான, நீடித்த தீர்வு கிடைக்கும் என்ற உறுதியான நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sri Lankan Tamils rights danger Chief Minister Stalin writes letter Prime Minister Modi


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->