பனைத் தொழிலாளி மீது துப்பாக்கிச் சூடு...! 'காவல்துறை என்ன பாடம் கற்றது'...? - சீமான் கடும் சீற்றம்
Shooting palm oil worker What lesson did police learn Seeman furious
தென்காசி மாவட்டம் மருதம்புத்தூரில் பனைத் தொழிலாளி மணிகண்டன் மீது காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சீற்றத்துடன் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஜெயராஜ் - பென்னிக்ஸ் வழக்கின் தீர்ப்பிற்குப் பிறகும், தமிழக காவல்துறை எவ்விதப் பாடமும் கற்காமல் எளிய மக்களின் உயிரோடு விளையாடுவது மனிதாபிமானமற்ற செயல் என அவர் சாடியுள்ளார்.

தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தத் திறனற்ற காவல்துறை, கள் இறக்கும் எளிய தொழிலாளர்களைப் பயங்கரவாதிகள் போலச் சித்தரித்து வேட்டையாடுவது கொடுங்கோன்மையின் உச்சம் என அவர் விமர்சித்துள்ளார்.
அரசு மதுக்கடைகளில் விற்கப்படும் மது புனிதத் தீர்த்தமா? என வினவியுள்ள அவர், உடலுக்கு ஊறு விளைவிக்காத கள்ளை மருத்துவ குணமிக்க உணவாகப் பல மாநிலங்கள் அங்கீகரித்துள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் அதற்குத் தடை விதிப்பது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் தர்மபுரி மற்றும் திருச்சி மாவட்டங்களில் பனைத் தொழிலாளர்கள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களையும், அவர்களை ஆடையின்றி அவமானப்படுத்திய காவல்துறையின் அநாகரிகச் செயல்களையும் சுட்டிக்காட்டியுள்ள சீமான், சாராய ஆலைகளை நடத்தும் ஆளும் வர்க்கத்தினரின் நலனுக்காகவே இத்தகைய அடக்குமுறைகள் ஏவி விடப்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
பனைத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடும் ஒரே இயக்கமாக நாம் தமிழர் கட்சி திகழ்வதாக அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் காவல்துறை இருக்கும் வேளையில், இந்தத் துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவிட்டது யார்? என்ற கேள்வியை எழுப்பியுள்ள அவர், இக்கொடுமைகளுக்கு மக்கள் வரும் தேர்தலில் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என எச்சரித்துள்ளார்.
மேலும், துப்பாக்கிச் சூடு நடத்திய காவல் உதவி ஆய்வாளர் இசக்கிராஜா மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்றும், இந்த வழக்கினை உடனடியாக சி.பி.சி.ஐ.டி (CBCID) விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Shooting palm oil worker What lesson did police learn Seeman furious