செந்தில் பாலாஜியின் கோரிக்கை அதிரடி நிராகரிப்பு...! எந்த நேரத்திலும் கைது செய்யக் காத்திருக்கும் காவல்துறை...! - தீவிரமாகும் அரசியல் பரபரப்பு...! - Seithipunal
Seithipunal


குதிரை பேரம் தொடர்பான வழக்கில் முன் ஜாமீன் பெற்றிருந்தாலும், வேறு வழக்குகளில் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் இருப்பதாகக் கூறி செந்தில் பாலாஜியும், அவரது சகோதரர் அசோக்குமாரும் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் குதிரை பேரம் நடத்தியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், தங்களுக்கு ஐகோர்ட்டு நிபந்தனைக்குட்பட்ட முன் ஜாமீன் வழங்கியுள்ளதாக செந்தில் பாலாஜி மற்றும் அசோக்குமார் தங்களது மனுக்களில் குறிப்பிட்டிருந்தனர்.மேலும், ஐகோர்ட்டு விதித்துள்ள அனைத்து நிபந்தனைகளையும் முறையாகப் பின்பற்றத் தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

இதற்கிடையே, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக கணக்கு தீர்க்க வேண்டியுள்ளதாக வெளிப்படையாகப் பேசியிருப்பதால், தங்களை ஏதேனும் ஒரு வழக்கில் கைது செய்ய காவல்துறைக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருக்கலாம் என அச்சம் தெரிவித்தனர்.

குதிரை பேரம் தொடர்பான வழக்கில் தங்களை காவலில் வைத்து விசாரிக்கத் தேவையில்லை எனக் கூறியே ஐகோர்ட்டு முன் ஜாமீன் வழங்கியுள்ள நிலையில், தொடர்ந்து சோதனைகள் நடத்தப்படுவதாகவும் அவர்கள் மனுவில் தெரிவித்திருந்தனர். சட்டப்படி நடைபெறும் எந்தவொரு புலனாய்வுக்கும் தாங்கள் தடையாக இல்லை என்றும், விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகவும் கூறியிருந்தனர்.

மேலும், காவல்துறையிடம் நிலுவையில் உள்ள ஏதேனும் வழக்குகளின் விசாரணைக்கு தங்களது ஒத்துழைப்பு தேவைப்பட்டால், சட்டப்படி முறையான அறிவிப்பை அனுப்பி விசாரணைக்கு அழைக்க உத்தரவிட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். சோதனை மற்றும் விசாரணை என்ற பெயரில் தங்களைத் துன்புறுத்தக் கூடாது என காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுக்களில் வலியுறுத்தியிருந்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தன. அப்போது, மனுதாரர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, பொதுவான உத்தரவை கோரியிருப்பதால், விரிவான பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்று அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன் கோரிக்கை விடுத்தார்.

செந்தில் பாலாஜி மற்றும் அசோக்குமார் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, குதிரை பேரம் தொடர்பான வழக்கில் முன் ஜாமீன் பெற்றுள்ள தங்களை வேறு வழக்குகளில் கைது செய்யக்கூடும் என்ற அச்சம் இருப்பதாகத் தெரிவித்தார். விசாரணையில் தலையிட தாங்கள் விரும்பவில்லை என்றும், சட்டப்படி முறையான அறிவிப்பு அனுப்பி விசாரணைக்கு அழைக்க வேண்டும் என்பதே தங்களது கோரிக்கை என்றும் அவர் வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, குதிரை பேரம் தொடர்பான வழக்கில் முன் ஜாமீன் வழங்கப்பட்டிருந்தாலும், மனுதாரர்கள் இதுவரை சரணடைந்து முன் ஜாமீன் பெறவில்லை என்பதைச் சுட்டிக்காட்டினார். இந்த நிலையில், தங்களைத் துன்புறுத்தக் கூடாது என முன்கூட்டியே உத்தரவு கோர முடியாது என்றும் நீதிபதி தெரிவித்தார்.

மேலும், பிற வழக்குகளைப் பொறுத்தவரை, அவற்றின் விசாரணை தொடங்குவதற்கு முன்பே முன்கூட்டியே இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், மனுதாரர்கள் கோரியபடி பொதுவான உத்தரவைப் பிறப்பிக்க முடியாது எனக் கூறிய நீதிபதி, செந்தில் பாலாஜி மற்றும் அசோக்குமார் ஆகியோரின் மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதன்மூலம், தங்களை வேறு வழக்குகளில் கைது செய்யக் கூடாது என்றும், விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக் கூடாது என்றும் செந்தில் பாலாஜி மற்றும் அசோக்குமார் முன்வைத்த கோரிக்கைகளை சென்னை ஐகோர்ட்டு நிராகரித்துள்ளது.

இதற்கிடையே, நீதிமன்ற உத்தரவுப்படி திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் செந்தில் பாலாஜியும், அவரது சகோதரர் அசோக்குமாரும் இதுவரை ஆஜராகவில்லை என்பதால், அவர்களை கைது செய்வது தொடர்பாக காவலர்கள் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Senthil Balaji request rejected outright Police waiting arrest him at any moment Political turmoil intensifies


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->