திடீர் திருப்பம்! மோடியை நேரடியாக எதிர்த்தால்.. திமுகவுக்கு சீமான் ஆதரவு!
Seeman support DMK if contests against Modi
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இதுவரை நடைபெற்ற தேர்தலை போலவே இந்த முறையும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுமா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர் ''எங்களின் கொள்கை முடிவுப்படி தனித்து தான் போட்டியிடுவோம். எங்கள் கொள்கையின்படி வழிவந்த பல கட்சிகள் எந்த கோட்பாட்டினை எதிர்த்தார்களோ அவர்களிடமே மீண்டும் சரண் அடைந்து விட்டனர்.
திராவிட ஆற்றல்களை நின்று சண்டை செய்ய முடியாமல் மீண்டும் சமரசம் செய்து கொண்டனர். மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். மாற்றத்தை நோக்கி மக்கள் வாக்களிக்கும் போது மீண்டும் அதே கட்சிகளுடன் கூட்டணி வைப்பதால் மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.

இந்த பின்புலமும் இல்லாமல் உருவானது கட்சிக்கு 7 சதவீதம் வாக்குகளுடன் தமிழகத்தின் 3வது பெரிய கட்சியாக நிறுத்திய உள்ளனர். இதற்கு காரணம் தனித்து போட்டியிடுவது மட்டும்தான். இந்திய கட்சிகளுடனும், திராவிட கட்சிகளுடன் ஒரு காலத்திலும் தேர்தல் உடன்பாடு கிடையாது. திமுக, அதிமுகவுடன் மோதுவது பங்காளி சண்டை. மு.க ஸ்டாலின் பிரச்சாரம் செய்த காங்கிரஸ் ஆட்சி தற்போது கர்நாடகாவில் அமைந்துள்ளது.
என் மாநிலத்திற்கு உரிய நதி நீர் பங்கீடு தரவில்லை என்றால் கூட்டணியில் இருந்து வெளியேற நேரிடும் என கடுமையை காட்ட வேண்டும். அவ்வாறு அவர்கள் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றால் காங்கிரசை விட்டு வெளியேறுங்கள். காங்கிரசை விட பெரிய கட்சியை நான். 40 தொகுதிகளில் இருந்தும் நான் விலகிக் கொள்கிறேன் எந்த நிர்ப்பந்தமும் இல்லாமல் உங்களை ஆதரித்து நான் தேர்தல் பணியாற்றுகிறேன் என காவிரி விவகாரத்தில் கூறியிருந்தேன்.

இப்போது கூட ராமேஸ்வரத்தில் மோடி போட்டியிட்டால் நான் போட்டியிடுவேன் என கூறியுள்ளேன். கடந்த தேர்தலில் பாஜக போட்டியிட்ட 5 தொகுதிகளில் தூத்துக்குடியில் மட்டும் நேரடியாக தமிழிசை சௌந்தர்ராஜன் போட்டியிட்ட தொகுதியில் மட்டுமே உதயசூரியன் போட்டியிட்டது. மற்ற நான்கு தொகுதிகளை ஏன் கூட்டணிக் கட்சிகளுக்கு திமுக வழங்கியது. பாஜகவை வீழ்த்த வேண்டும் என நினைத்திருந்தால் மற்ற நான்கு இடங்களிலும் உதயசூரியன் சின்னத்தில் திமுக போட்டியிட்டு இருக்க வேண்டும்.
ஒருவேளை மோடி இராமேஸ்வரத்தில் போட்டியிட்ட விருப்பப்பட்டு திமுக கூட்டணி கட்சிகளுக்கு வழங்காமல் நேரடியாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டால் அந்த தொகுதியில் இருந்து நான் விலகிக் கொள்கிறேன். திமுகவை நான் ஆதரிக்கிறேன். இல்லையென்றால் நான் போட்டியிடுவேன்" என பதில் அளித்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளார்.
English Summary
Seeman support DMK if contests against Modi