எங்களை மன்னியுங்கள் ஸ்டான் சுவாமி ஐயா! – சீமான் உருக்கம்! - Seithipunal
Seithipunal


நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில், "ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள பழங்குடியின மக்களுக்காகப் போராடி வந்த மனித உரிமைச் செயற்பாட்டாளரும், சமூகப் போராளியுமான ஐயா ஸ்டான் சுவாமி அவர்களது கணினியின் சேமிப்பகத்திற்குள் ஊடுருவல் செய்து, குற்றவியல் ஆவணங்கள் உட்செலுத்தப்பட்டுள்ளதை ‘அர்செனல் கன்சல்டிங்’ எனும் அமெரிக்கத் தடயவியல் நிறுவனம் கண்டுபிடித்திருப்பதின் மூலம் அவரது கைது நடவடிக்கை ஆளும் பாஜக அரசின் அப்பட்டமான பழிவாங்கல் என்பது உறுதியாகிறது.

ஐயா ஸ்டான் சுவாமியின் கணினியில் இருந்ததென தேசியப் புலனாய்வு முகமைக் குற்றஞ்சாட்டிய 44 ஆவணங்களும் அவருக்குத் தெரியாமல் அவரது கணினியில் சேர்க்கப்பட்டவை என்பதும், அவை ஒருமுறைகூட அவரால் திறந்து பார்க்கப்படவில்லை என்பதும் தடவியல் நிறுவனத்தின் அறிக்கையில் தெளிவுப்படுத்தப்பட்டிருக்கிறது.

முதுமையாலும், உடல்நலக்குறைவாலும் நலிவுற்றிருந்த ஐயா ஸ்டான் சுவாமி அவர்களைப் புனையப்பட்ட வழக்கில் கைது செய்து தொடர்ச்சியாகச் சிறைப்படுத்தி, அவரது உடல்நலனை மேலும் குன்றச் செய்த ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் கொடுங்கோல் செயல்பாட்டின் விளைவாகவே அவரது மரணம் நிகழ்ந்தது என்பதை மறுப்பதற்கில்லை.

இன்றைக்கு அவர் இவ்வழக்கில் சிக்கவைக்கப்பட்டிருகிறார் என்பது தெளிவாகியிருப்பதன் மூலம், ஐயா ஸ்டான் சுவாமியின் மரணமென்பது சட்டத்தின் உதவியோடு, சனநாயகத்தைப் புதைகுழியில் தள்ளி பாஜக அரசு செய்த பச்சைப்படுகொலை என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

கல்புர்கி, கோவிந்த் பன்சாரே, நரேந்திர தபோல்கர், கௌரி லங்கேஷ் போன்ற கருத்தாளர்களையும், செயற்பாட்டாளர்களையும் துப்பாக்கித் தோட்டாக்களின் மூலம் கொன்றொழித்தவர்கள், சட்டத்தின் மூலம் ஐயா ஸ்டான் சுவாமியைக் கொன்றார்கள் என்பது மறுக்கவியலாப் பேருண்மையாகும்.

நடுக்கவாத நோயால் நீரருந்தக்கூட முடியாது அவதிப்பட்டு வந்தவருக்கு உறிஞ்சுக்குழாய் கொடுப்பதற்கு காலநேரம் கேட்டு, பிறகு, அதனையும் தரமுடியாதென மறுத்த தேசியப் புலனாய்வு முகமையின் கொடுங்கோன்மையை எங்கு போய் சொல்வது?

பழங்குடி மக்கள் தங்களுக்குத் துளியும் தொடர்பே இல்லாத வழக்குகளிலெல்லாம், கைது செய்யப்பட்டு, மனித உரிமை மீறலுக்கு ஆளாக்கப்படுவதை எதிர்த்து, தனது வாழ்நாள் முழுமைக்கும் போராடி வந்த ஐயா ஸ்டான் சுவாமி அவர்களே, பீமா கோரேகான் வழக்கில் பொய்யாகச் சேர்க்கப்பட்டு, கொடும் மனித உரிமை மீறலுக்கு உள்ளாக்கப்பட்டு, சிறைக்குள்ளேயே மரணித்தது வரலாற்றுப் பெருந்துயரமாகும்.

இதே வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டு, கொடுஞ்சிறை தண்டனைக்கு உள்ளாகியுள்ள ஆனந்த் டெல்டும்டே, வரவர ராவ், சுதா பரத்வாஜ், கவுதம் நவுலேகா உள்ளிட்ட இன்ன பிற சமூகச் செயற்பாட்டாளர்களும் ஐயா ஸ்டான் சுவாமி அவர்களைப் போன்று பொய்யான வழக்கில்தான் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்பதை இதன்மூலம் உறுதிப்படுத்த முடிகிறது.

ஆகவே, இதற்குப் பிறகாவது, இவ்வழக்கிலுள்ள மற்றவர்களுக்கு நீதியும், விடுதலையும் கிடைக்குமா? என்பதுதான் நம்மிடையே எழும் முதன்மையானக் கேள்வியாகும்!

ஒரு குடிமகனின் தனியுரிமையைப் பறிக்கும்விதமாக, அவரது கணினிக்குள் ஊடுருவல் செய்து, அதில் குற்றவழக்குகள் தொடுப்பதற்கு வசதியாக, முறைகேடான முறையில் சட்டவிரோத நடவடிக்கைகளை உள்ளீடு செய்து, பொய்யான ஆதாரங்களைத் திரட்டுவதற்கு, ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு அனுமதியளிக்கும் வகையிலான தேசியப் புலனாய்வு முகமையின் செயல்பாடுகள் அடிப்படை மனித உரிமைக்கே எதிரானது இல்லையா?

தேசியப் புலனாய்வு முகமை என்கிற அமைப்பை உருவாக்க சட்டம் கொண்டுவரப்பட்டபோது, ‘தேசத்தின் நலன்’ எனும் பெயரில் ஆதரித்து, அதற்கு வாக்குச் செலுத்திய அரசியல் கட்சிகள் இதற்கு என்ன பதில் கூறப்போகிறார்கள்? அரசின் அடக்குமுறைகளை எதிர்த்துப் போராடும் சமூக செயற்பாட்டாளர்களை, மனிதவுரிமைப் போராளிகளை இதுபோன்று கைது செய்து அடக்கி, ஒடுக்குவதற்குத்தான் தேசியப் புலனாய்வு முகமை என்கிற அமைப்பு பயன்படுத்தப்படுகிறது என்றால் மிகையாகாது.

சட்டத்தின் பெயரில், ஈவு இரக்கமற்று நிகழ்த்தப்பட்ட ஐயா ஸ்டான் சுவாமி அவர்களின் மரணத்திற்கு யார் பொறுப்பேற்பது? கொடிய தேசியப் புலனாய்வு முகமை அமைப்பின் விசாரணை அதிகாரிகளா? அல்லது உள்துறை அமைச்சர் அமித்ஷாவா? அல்லது இந்தக் கொடுங்கோன்மை அரசாங்கத்திற்குத் தலைமை தாங்கும் பிரதமர் மோடியா? யார் பொறுப்பேற்பது? பதில் சொல்வது?

நாட்டின் நலன், இறையாண்மைக் காப்பு நடவடிக்கைகள் என்று கூறி இந்தியாவில் இயற்றப்படும் சட்டங்கள் மற்றும் திட்டங்கள் ஒவ்வொன்றையும் எந்தளவு சந்தேகக்கண்ணோடு அணுக வேண்டும் என்பதை இந்த நாட்டில் வாழும் மக்கள் ஒவ்வொருவரும் இனியாவது உணர வேண்டும்.

இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் முகத்திரை உலக அரங்கில் தோலுரிக்கப்பட்டு, இதுபோன்ற கொடும் நிகழ்வுகள் நாட்டிற்கே பெரும் அவமானத்தையும், தலைகுனிவையும் தேடித்தந்துள்ள நிலையில், விசாரணை என்ற பெயரில் பொய்க்குற்றம் சுமத்தி, தேசியப் புலனாய்வு முகமையால் கைது செய்து சிறையில் அடைத்து வைத்துள்ள அப்பாவிகளை இனியாவது விடுதலை செய்ய வேண்டுமென்று ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசை வலியுறுத்துகிறேன்.

எங்களை மன்னியுங்கள் ஐயா ஸ்டான் சுவாமி அவர்களே!

ஒரு நாடு, அந்நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சட்டம் இயற்றுவது இயல்பு, ஆனால் இந்நாட்டில் மட்டும்தான் அரசுக்கெதிரான எண்ணங்களை நசுக்குவதற்கும், கருத்தாளர்களை வாயடைப்பதற்கும் பயன்படுத்தப்படுவது கொடுமையான உண்மை.

இந்த நாட்டில் சட்டங்கள் எனப்படுபவை உண்மையில் அதிகார மையங்களுக்கு ஏவல் வேலை பார்க்கிற, அடித்தட்டு மக்களை, அவர்களுக்கு குரல் கொடுப்பவர்களை ஒடுக்குகிற ஒரு கருவியாகத்தான் உள்ளது. அதனைத் தடுக்க முடியாத எங்களின் இயலாமைக்கு உங்களைப் பலி கொடுத்துவிட்டோம்."

இவ்வாறு அந்த அறிக்கையில் சீமான் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Seeman Say About Stalin Swami Issue


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->