மோடி பயணத்திற்குப் பிறகே தொகுதிப் பங்கீடு? இதுதான் என்டிஏ கூட்டணியின் தொகுதி பங்கீடு கணக்கு.. எடப்பாடி எடுக்க போகும் முடிவு என்ன!
Seat sharing only after Modi visit This is the NDA alliance seat sharing calculation What decision will Edappadi take
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக தரப்பில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அதிமுக கூட்டணியில் இதுவரை அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகள் தொடங்காதது அரசியல் கவனத்தை ஈர்த்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தமிழ்நாடு வந்துள்ள சூழலில், அவரது பயணத்திற்குப் பிறகே என்டிஏ கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஜனவரி 23ஆம் தேதி நடைபெற்ற என்டிஏ கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமமுக தலைவர் டிடிவி தினகரன் ஒரே மேடையில் தோன்றி கூட்டணியின் ஒற்றுமையை வெளிப்படுத்தினர். இருப்பினும் அதன் பின்னர் கூட்டணியின் செயல்பாடுகள் மந்தமானதாக இருந்ததாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மோடியின் பயணத்திற்குப் பிறகே தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடங்கும் எனத் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதிமுக தரப்பில், இந்த தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிட்டு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்க வேண்டும் என்ற நோக்கம் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாஜக தரப்பு, 2024 மக்களவைத் தேர்தலில் பெற்ற வாக்கு சதவீதத்தை அடிப்படையாக கொண்டு அதிக இடங்களை கோரத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தொடக்கக் கோரிக்கையாக 50 இடங்கள் வரை முன்வைக்கப்படலாம் என்றும், 35 இடங்கள் வரை சமரசம் செய்யலாம் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. அதற்கு கீழ் இறங்க பாஜக தயாராக இல்லை எனவும் கூறப்படுகிறது.
அமமுக தலைவர் டிடிவி தினகரன் குறைந்தபட்சம் 15 இடங்கள் வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பதாகவும், குறிப்பாக தென் தமிழ்நாட்டில் 10 தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் கோரியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனுடன், புதிய நீதிக் கட்சி, தமிழக முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட சிறிய கட்சிகளும் தலா இரண்டு இடங்கள் கோரியுள்ளன. மேலும், புதிய தமிழகம் போன்ற கட்சிகளையும் கூட்டணியில் இணைக்க பாஜக முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை அதிமுக தனது தொகுதிப் பங்கீட்டு குழுவை அறிவிக்காதது குறிப்பிடத்தக்கது. கூட்டணிக்குள் பல தரப்புகள் தனித்தனியாக கோரிக்கைகள் வலியுறுத்தும் நிலையில், இறுதி ஒப்பந்தம் எப்போது உருவாகும் என்பது குறித்து தெளிவில்லை. மோடியின் தமிழ்நாடு பயணத்திற்குப் பிறகு பேச்சுவார்த்தைகள் வேகமெடுக்குமா என்பதே தற்போதைய அரசியல் கேள்வியாக உள்ளது.
English Summary
Seat sharing only after Modi visit This is the NDA alliance seat sharing calculation What decision will Edappadi take