'தவெகவின் கொள்கை என்பது இருமொழிக் கொள்கைதான்' ; பள்ளிக் கல்வி அமைச்சர் ராஜ்மோகன் உறுதி..!
School Education Minister Rajmohan affirms that the two language policy is indeed the policy of the TVK
'தவெகவின் கொள்கை என்பது இருமொழிக் கொள்கைதான்' என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது;
கடந்த 02 ஆண்டுகளாக பள்ளிக் கல்வித் துறைக்கான நிதி மத்திய அரசிடம் இருந்து வந்து சேரவில்லை. இது மாணவர்களுக்கானது. எந்தக் காரணத்துக்காகவும் அதை நிறுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், எந்தவித மறைமுக அழுத்தத்துக்கும் நாங்கள் அடிபணிபவர்கள் கிடையாது என்றும், கொள்கை சமரசம் என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லை எனவும், இருமொழிக் கொள்கை என்பது கட்சியின் பிரகடனப்படுத்தப்பட்ட கொள்கை அதில் மாற்றுக் கருத்தே கிடையாது என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையில் பிஎம்ஸ்ரீ பள்ளித் திட்டம் மூலம் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், இந்த திட்டத்தில் மும்மொழிக் கொள்கை இருப்பதால் தமிழகம் இணைய மமறுத்துள்ளது. இதன் காரணமாக, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் மூலமாக தமிழகத்துக்கு தரவேண்டிய சுமார் ரூ.3,500 கோடியை வழங்காமல் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.
இந்த விவகாரம் கடந்த திமுக ஆட்சியில் பெரும் சர்ச்சையான தோடு, பலரும் கண்டனங்களையும் தெரிவித்தனர். இதன் தொடர்ச்சியாக, மத்திய கல்வி அமைச்சகம் சமீபத்தில் தமிழக அரசுக்கு மீண்டும் ஒரு கடிதம் எழுதியுள்ளது. பிஎம்ஸ்ரீ பள்ளித் திட்டத்தின்கீழ் பள்ளிகளை மேம்படுத்த உடனடியாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.இந்நிலையில், தவெக தலைமையில் புதிய அரசு பதவியேற்ற சூழலில் மத்திய அரசு இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளது.
இந்த விவகாரத்தில் தவெக என்ன முடிவெடுக்கும் என்றும், முந்தைய திமுக அரசு போல எதிர்ப்பு தெரிவிக்குமா அல்லது ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமா, நிறுத்தி வைக்கப்பட்ட கல்விக்கான நிதியை மத்திய அரசிடம் இருந்து பெற என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கும் என பல அரசியல் வட்டாரத்தில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது.
English Summary
School Education Minister Rajmohan affirms that the two language policy is indeed the policy of the TVK