'பல அணிகளா பிரியாதீங்க'...! தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு ராகுல் காந்தி மாமல்லபுரம் பயிற்சி முகாமில் பரபரப்பு பேச்சு...!
Say goodbye to many teams Rahul Gandhi sensational speech Tamil Nadu Congress executives at Mamallapuram training camp
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம், மாமல்லபுரத்தில் தமிழ்நாடு சுற்றுலாத்துறைக்கு சொந்தமான கடற்கரை விடுதியில் கடந்த 23-ஆம் தேதி தொடங்கி பல்வேறு அமர்வுகளுடன் நடைபெற்றது. அதன் நிறைவு நிகழ்ச்சியில் நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டு நிர்வாகிகளுக்கு முக்கிய அரசியல் ஆலோசனைகளை வழங்கினார்.

சென்னை விமான நிலையம் வந்தடைந்த அவருக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.நிறைவு நிகழ்ச்சியில் உரையாற்றிய ராகுல் காந்தி, தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி எதிர்பார்த்த அளவுக்கு அமையாததற்கான முக்கிய காரணமாக உட்கட்சிக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகள் மற்றும் அணிவாரியான செயல்பாடுகளை சுட்டிக்காட்டினார். தனித்தனி குழுக்களாக செயல்படும் போக்கு கட்சியின் வலிமையை சிதைத்து வருவதாக அவர் வலியுறுத்தினார்.
பயிற்சி முகாமில் மாவட்டத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் பேசிய அவர், உட்கட்சி மோதல்கள், ஒருங்கிணைப்பு இல்லாமை மற்றும் அணி அரசியல் ஆகியவை காங்கிரஸ் கட்சியின் முன்னேற்றப் பாதையில் பெரும் தடையாக மாறியுள்ளதாக வேதனையுடன் எடுத்துரைத்தார். "கட்சிக்குள் நிலவும் பிளவுகளே வளர்ச்சியை முடக்குகின்றன" என்ற கருத்தை அவர் தெளிவாக வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
மாநிலத் தலைவர்கள் முதல் அடிமட்டத் தொண்டர்கள் வரை அனைவரும் ஒரே நோக்கத்துடன் செயல்பட வேண்டிய அவசியத்தை ராகுல் காந்தி சுட்டிக்காட்டினார். தலைமைக்கும் நிர்வாகிகளுக்கும் இடையே முழுமையான ஒருங்கிணைப்பு இல்லாத நிலை, களப்பணிகளிலும் தேர்தல் நடவடிக்கைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அரசியல் அரங்கில் வலுவான முன்னேற்றத்தைப் பெற வேண்டுமெனில், தனிப்பட்ட விருப்பங்களையும் அணி அரசியலையும் ஒதுக்கிவைத்து, கட்சியின் நலனையே முதன்மையாகக் கருதி அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தினார்.
தமிழ்நாட்டில் காங்கிரஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் புதிய மாவட்டத் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டு கட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Say goodbye to many teams Rahul Gandhi sensational speech Tamil Nadu Congress executives at Mamallapuram training camp