தமிழகத்தில் இலவசங்களை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.. தமிழக அரசுக்கு சரத்குமார் வலியுறுத்தல்.!! - Seithipunal
Seithipunal


கவர்ச்சிகர இலவச திட்டங்கள் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும் .தமிழக அரசு உறுதியான முடிவெடுத்து இலவசங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநில அரசுகள், மாநில நிதி நிலைமையை பல வருடங்களாக சீரமைக்காமல், பல்வேறு கவர்ச்சிகரமான இலவச திட்டங்களை தொடர்வதால், நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்படும் அபாயம் உள்ளது என பொருளாதார நிபுணர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கல்வி, மருத்துவம், அத்தியாவசியம் தவிர வேறு எவற்றிற்கும் இலவசம் வழங்கப்படக்கூடாது என்ற கருத்தை, பல வருடங்களாக அறிக்கைகள் வாயிலாகவும், தேர்தல் வாக்குறுதிகளாகவும், சுட்டிக்காட்டி வந்திருக்கிறேன். நடைமுறைக்கு சாத்தியமற்ற, கவர்ச்சிகரமான திட்டங்களை கொண்டு ஆக்கப்பூர்வமான மக்கள் நலத்திட்ட பணிகளில் ஈடுபட முடியாது எனவும், அதனால் அரசின் பொருளாதாரம் பாதிக்கப்படும் எனவும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்திருக்கிறேன்.

அரசின் நிதிநிலைமை வரவுக்கு மிஞ்சிய செலவாக, பெரும் கடனில் சிக்கியிருப்பதற்கு முக்கிய காரணம் இலவசம் தான், எளிய மக்கள் பயன்பெறும் அத்தியாவசிய இலவச, மானிய திட்டங்களை வரைமுறையில்லாமல், வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள மக்களுக்கு மட்டுமன்றி வசதி படைத்தவர்களுக்கும் கொடுப்பதால் தான் அரசுக்கு பொருளாதார பின்னடைவு ஏற்படுகிறது. குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் இலவச, மானிய திட்டங்கள் என்றில்லாமல், பொருளாதார அடிப்படையில் எல்லைகளை நிர்ணயித்து, அடித்தட்டு மக்கள் வாழ்வாதார உயர்வுக்கும், பொருளாதார சேமிப்பை பெறுவதற்கும் ஏற்ற வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும்.

ஒரு மாநிலத்தின் ஆண்டு வரி வருவாய்க்குள், அந்த மாநிலத்தின் வளர்ச்சி திட்டங்கள் உட்பட செலவினங்களை அடக்கினால், மாநிலம் கடனில் தத்தளிக்க வேண்டிய சூழல் ஏற்படாது. தமிழகத்தை பொறுத்தவரை, மொத்த கடன் 6 லட்சம் கோடியை கடந்துவிட்ட நிலையில், ஆண்டுதோறும் வட்டி மட்டும் பல ஆயிரம் கோடி கட்டும் சூழல் நிலவுகிறது.

இதே நிலை தொடர்ந்தால், மேற்கொண்டு கடன் பெறவும் முடியாது, பெற்ற கடனை அடைக்கவும் முடியாது என்ற சூழல் உருவாகும். அப்போது, சொத்து வரி உயர்வு போன்று, மேலும் பல வரிகளை உயர்த்தும் கட்டாயத்திற்கு அரசு தள்ளப்படுவதுடன், சாமானிய மக்களின் மீது தான் அவை சுமையாக மீண்டும் மீண்டும் திணிக்கப்படும். இதே நிலை தொடர்வது ஆரோக்கியமற்றது.

நாட்டு வளர்ச்சிக்கும், அண்டை நாட்டில் ஏற்பட்ட பாதிப்புகளையும் கவனத்தில் கொண்டு, மக்களின் சமூக, பொருளாதார நிலை மேம்பட,தமிழகத்தில் அத்தியாவசியமற்ற இலவசங்களை முற்றிலும் கைவிடுவதற்கு அரசு உறுதியாக முடிவெடுக்க வேண்டும். இலவசங்களை தவிர்ப்பதற்கு அரசால் எடுக்கப்படும் முடிவின் உண்மைநிலையை புரிந்து கொண்டு, மக்களும் முழுமையாக ஆதரவு தெரிவிப்பார்கள் என நம்புகிறேன்.

எனவே, தமிழக அரசு உட்பட நாட்டில் உள்ள மாநில அரசுகள் இலவசங்களை முழுமையாக கைவிட்டு, மாநில பொருளாதார வளர்ச்சியில் கூடுதல் கவனம் செலுத்தி, வருவாயை பெருக்க வேண்டுமென அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
இலவசங்களை தவிர்ப்போம்! நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவோம் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sarathkumar statement for free


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->