பிரஸ் மீட்டை பார்த்து ஓடுவது மக்களை அவமதிப்பதே...! - அரசியல் தலைவர்களை வெளுத்து வாங்கிய பிரகாஷ் ராஜ்...!
Running away from a press meet insult people Prakash Raj who has been taunting political leaders
செய்தியாளர்களின் கேள்விகளை எதிர்கொள்ளாமல் அரசியல் தலைவர்கள் விலகிச் செல்வது, மக்களை அவமதிக்கும் செயலுக்கு இணையானது என்று நடிகர் பிரகாஷ் ராஜ் கடுமையாக விமர்சித்துள்ளார்.சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிரகாஷ் ராஜ் பேசுகையில், எந்தவொரு அரசியல் கட்சியுடனும் தான் இணைந்திருக்கவில்லை என்றும், மக்கள் நலனை முன்னிறுத்தும் அரசியலில் தொடர்ந்து உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்தான் ஆட்சியை வழிநடத்துகின்றனர். அதேவேளையில், குடிமக்களும் அரசியல் செயல்பாடுகளில் பங்கேற்க வேண்டும் என்பதை அரசியலமைப்பு வலியுறுத்துகிறது.அவ்வாறு இருக்கும்போது, மக்களின் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைவர்கள் செய்தியாளர்களை சந்திப்பதை தவிர்ப்பது ஏன்? பத்திரிகைகளை அவமதிக்கும் வகையில் நடந்து கொள்வது எதற்காக? என்று பிரகாஷ் ராஜ் கேள்வி எழுப்பினார்.
முதல்-அமைச்சராக இருந்தாலும், பிரதமராக இருந்தாலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் பொதுமக்களின் சார்பில் ஊடகங்கள் முன்வைக்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டிய பொறுப்பு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.இதனிடையே, இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய அரசின் செயல்பாடுகளையும் பிரகாஷ் ராஜ் கடுமையாக விமர்சித்தார்.
தேர்வுக் குழுவில் இந்திய தலைமை நீதிபதிக்கு பதிலாக மத்திய மந்திரி ஒருவரை இடம்பெறச் செய்ததன் மூலம், ஆளும் கட்சிக்கு சாதகமான வகையில் இரண்டுக்கு ஒன்று என்ற சமநிலையற்ற பெரும்பான்மை உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நியமிக்கப்பட்ட விதம் குறித்தும் அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளிலும் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.பணியிடத்தில் இருப்பது, மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது அல்லது வீட்டில் இல்லாதது போன்ற காரணங்களால் மட்டுமே சில குடிமக்கள் "வரவில்லை", "இடம் பெயர்ந்தார்" போன்ற காரணங்களின் கீழ் தன்னிச்சையாக வாக்குரிமையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.
வாக்குரிமை என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசியலமைப்பு வழங்கிய அடிப்படை ஜனநாயக உரிமை. அந்த உரிமை எந்த காரணத்தாலும் பறிக்கப்படாத வகையில் தேர்தல் நடைமுறைகள் வெளிப்படையாகவும், நியாயமாகவும் இருக்க வேண்டும் என்றும் பிரகாஷ் ராஜ் வலியுறுத்தினார்.
English Summary
Running away from a press meet insult people Prakash Raj who has been taunting political leaders