'தமிழகத்தில் ரத்த ஆறு ஓடக்கூடாது'...! வன்முறை கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்...! - மு. வீரபாண்டியன் வலியுறுத்தல்
Rivers blood should not flow Tamil Nadu We must put end culture violence M Veerapandian insists
சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள தனியார் மதுபான விடுதியில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, இலங்கைத் தமிழர் குடும்பத்தைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் யான்சி வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வு சட்டத்தின் ஆட்சிக்கும், சமூக பாதுகாப்பு அமைப்புகளுக்கும் விடுக்கப்பட்ட வெளிப்படையான சவாலாக கருதப்பட வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் பாலியல் வன்முறைகள், பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள் மற்றும் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது கவலைக்குரியதாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.யான்சி உயிரிழப்புக்கு காரணமான நபர்கள் மீது சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், குற்றத்தில் தொடர்புடைய அனைவருக்கும் நீதிமன்றத்தின் மூலம் அதிகபட்ச தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பெண்களின் பாதுகாப்பு என்பது சமுதாயத்தின் அடிப்படை பொறுப்பாகும். எனவே பணியிடங்கள், கல்வி நிலையங்கள், பொது இடங்கள் உள்ளிட்ட அனைத்து தளங்களிலும் பெண்கள் பாதுகாப்பாக இயங்கும் சூழலை உருவாக்க அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
அரசின் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வரும் தனியார் மதுபான விடுதிகள் மீது தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.மேலும், காவல்துறை மற்றும் உளவுத்துறை செயல்பாடுகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும், குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தப்பட வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மது மற்றும் போதைப்பழக்கத்தின் பரவல், வேலைவாய்ப்பின்மை, பொருளாதார நெருக்கடிகள், சமூக ஏற்றத்தாழ்வுகள் போன்ற பல்வேறு காரணிகள் இளைஞர்களின் வாழ்க்கை பாதையை மாற்றி அமைப்பதாகவும், அவை சமூக வன்முறைகளுக்கான சூழலை உருவாக்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய வாழ்க்கை முறையால் உருவாகும் மனஅழுத்தம், விரக்தி, உளவியல் சிக்கல்கள், விளையாட்டு மற்றும் ஆரோக்கியமான பொழுதுபோக்கு வாய்ப்புகளின் பற்றாக்குறை போன்றவையும் இத்தகைய வன்முறைச் சம்பவங்கள் அதிகரிக்க காரணமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பிரச்சினைகளுக்கு நீண்டகால தீர்வு காண கல்வி, கலை, இலக்கியம், திரைப்படம் உள்ளிட்ட துறைகளில் சமூக முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் பண்பாட்டு மாற்றங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
வன்முறையை இயல்பாக்கும் மனப்போக்கை முற்றிலும் ஒழித்து, மனிதநேயம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வளர்க்கும் வகையில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக்கொண்டுள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Rivers blood should not flow Tamil Nadu We must put end culture violence M Veerapandian insists