“அமைச்சராக முடியாத வயிற்றெரிச்சல்!” – எடப்பாடி மீது வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் குற்றச்சாட்டுக்கு அக்ரி கிருஷ்ணமூர்த்தி பதிலடி - Seithipunal
Seithipunal


2026 சட்டமன்றத் தேர்தல் தோல்வி தொடர்பாக அதிமுகவில் மீண்டும் கருத்து மோதல் தீவிரமடைந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி மீது முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு, அதிமுக சட்டமன்றக் கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி கடுமையாக பதிலளித்துள்ளார்.

சமீபத்தில் எஸ்.பி. வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்கும் வாய்ப்பை எடப்பாடி பழனிசாமி பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றும், அவரது தவறான மற்றும் தன்னிச்சையான முடிவுகளால் அதிமுக தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வருவதாகவும் குற்றம்சாட்டியிருந்தனர்.

மேலும், 2021 சட்டமன்றத் தேர்தல், 2024 மக்களவைத் தேர்தல் மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தல் என மூன்று தேர்தல்களிலும் அதிமுகவுக்கு வெற்றி பெறும் வாய்ப்பு இருந்தபோதிலும், எடப்பாடி பழனிசாமியின் முடிவுகளால் அந்த வாய்ப்புகள் தவறவிடப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், திருவண்ணாமலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

அவர் கூறுகையில், “சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கு எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்க வேண்டும் என்று எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் கூறுகின்றனர். ஆனால், இந்தத் தேர்தலில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேட்பாளர்களை பரிந்துரை செய்தது அந்தந்த மாவட்டச் செயலாளர்கள்தான்.

கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கு எஸ்.பி. வேலுமணிதான் வேட்பாளர்களைப் பரிந்துரை செய்தார். அதேபோல் நத்தம் விஸ்வநாதன், சி.வி. சண்முகம், கே.பி. அன்பழகன் உள்ளிட்ட மாவட்டச் செயலாளர்களும் தங்களது மாவட்டங்களுக்கான வேட்பாளர்களைப் பரிந்துரை செய்தனர்.

மாவட்டச் செயலாளர்களாகவும், முன்னாள் அமைச்சர்களாகவும் இருந்தவர்கள் அந்தந்த மாவட்டங்களில் குறுநில மன்னர்களைப் போல செயல்பட்டனர். அவர்கள் பரிந்துரைத்தவர்களைத்தான் எடப்பாடி பழனிசாமி வேட்பாளர்களாக அறிவித்தார். எனவே, அந்த வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டிய பொறுப்பும் அவர்களுக்கே இருந்தது” என்று தெரிவித்தார்.

தனது தொகுதியிலும் வேட்பாளர் தேர்வு எவ்வாறு நடைபெற்றது என்பதை உதாரணமாகக் கூறிய அக்ரி கிருஷ்ணமூர்த்தி, திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தில் தான் பரிந்துரைத்த வேட்பாளர்களையே எடப்பாடி பழனிசாமி அறிவித்ததாக கூறினார்.

தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிரசாரத்தை சுட்டிக்காட்டிய அவர், “234 தொகுதிகளில் 196 தொகுதிகளுக்கு எடப்பாடி பழனிசாமி நேரடியாகச் சென்று பிரசாரம் செய்தார். அவரது கடுமையான உழைப்பால் தேசிய ஜனநாயகக் கூட்டணி சுமார் 1 கோடியே 35 லட்சம் வாக்குகளைப் பெற்றது. அதிமுக தனித்து 47 இடங்களில் வெற்றி பெற்றது” என்றார்.

இதனால் தேர்தல் தோல்விக்கு எடப்பாடி பழனிசாமியை மட்டும் பொறுப்பாக்க முடியாது என்றும், அந்தந்த மாவட்டங்களில் வேட்பாளர்களை பரிந்துரைத்த மாவட்டச் செயலாளர்கள்தான் தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி வலியுறுத்தினார்.

மேலும், “தங்கள் குறைகளை மறைப்பதற்காக எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்துகின்றனர். எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். இவர்கள் அனைவருமே தவெகவுடன் தொடர்பு வைத்திருப்பவர்கள். அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காகவே அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். இவர்கள் பேசுவது அனைத்தும் அப்பட்டமான பொய்” என்று கடுமையாக விமர்சித்தார்.

மேலும், “அதிமுக என்ற லேபிளை ஒட்டிக்கொண்டு தொடர்ந்து இத்தகைய விமர்சனங்களை முன்வைத்தால், எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்துவோம்” என்றும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

இதன் மூலம் அதிமுகவுக்குள் ஏற்கனவே நிலவி வரும் உட்கட்சி மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது. ஒருபுறம் எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு எதிராக முன்னாள் அமைச்சர்கள் குரல் எழுப்பி வரும் நிலையில், மறுபுறம் அவர்களுக்கு எதிராக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வெளிப்படையாகப் பதிலடி கொடுத்து வருவது அதிமுக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Resentment over not becoming a minister Agri Krishnamurthy hits back at Velumani and Natham Viswanathan allegations against Edappadi


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...


செய்திகள்



Seithipunal
--> -->