அடுத்த முதல்வர் நீங்கள்தான் மேடம்! சௌமியா அன்புமணி பக்கம் வீசும் ஆதரவு அலை! சுக்குநூறாய் உடைந்த சாதிக்கட்சி இமேஜ்!
A wave of support is blowing in favor of Sowmya Anbumani
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதும், மக்கள் பிரச்சனைகளை விவாதிக்க வேண்டிய அவையில் நக்கல், நையாண்டி என அரசியல் மோதல்கள் அரங்கேறுவதும் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி வருவதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்தச் சூழலில், சட்டப்பேரவையில் மக்களின் குரலாக சௌமியா அன்புமணியின் குரல் ஓங்கி ஒலிப்பதாக நெட்டிசன்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒரு பிரச்சனையை வெறுமனே சுட்டிக்காட்டுவதோடு நிறுத்திக்கொள்ளாமல், அதன் பின்னணி என்ன, அதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு என்ன, அதற்கான தீர்வு என்ன என்பதையும் அனைத்து தரப்பு மக்களுக்கும் புரியும் வகையில் எளிய நடையில் தெளிவாக எடுத்துரைப்பதாக சௌமியா அன்புமணிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
குறிப்பாக மதுவிலக்கு, விவசாயிகள் பிரச்சனை, காவிரி நீர் விவகாரம் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகளில் சௌமியா அன்புமணி முன்வைக்கும் கருத்துகள் கவனம் பெற்றுள்ளன. அவரது கம்பீரமான பேச்சு, புள்ளிவிவரங்களுடன் பிரச்சனைகளை அணுகும் விதம் மற்றும் மக்களின் கோரிக்கைகளை நேரடியாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் அணுகுமுறை ஆகியவை பாராட்டத்தக்கதாக இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தேர்தல் வெற்றிக்குப் பிறகு சௌமியா அன்புமணியின் செயல்பாடுகளும், பாமகவின் செயல்பாடுகளும் தொடர்ந்து மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. குறிப்பாக, மேகதாது அணை விவகாரத்தை முன்வைத்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மேற்கொண்ட நடைபயணம் மற்றும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைப் பாதுகாப்பது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வு பயணம் ஆகியவை பேசுபொருளாகியுள்ளன.
இதேபோல், சமீபத்தில் சட்டப்பேரவையில் சௌமியா அன்புமணி பேசும்போது, முதலமைச்சர் விஜய் அவரது கருத்துகளை தீவிரமாகக் குறிப்பெடுத்துக் கொண்ட காட்சி சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டது. இதனைச் சுட்டிக்காட்டிய பலரும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குப் பிறகு தமிழக சட்டப்பேரவையில் கவனம் ஈர்க்கும் பெண் அரசியல் ஆளுமையாக சௌமியா அன்புமணி உருவாகி வருவதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதனால் சௌமியா அன்புமணிக்கு அரசியலில் நீண்ட எதிர்காலம் இருப்பதாக மக்கள் மத்தியில் நம்பிக்கை உருவாகி வருவதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். குறிப்பாக பெண்கள் மத்தியில் அவருக்கு கிடைக்கும் வரவேற்பும், சட்டப்பேரவையில் அவர் வெளிப்படுத்தும் அரசியல் அணுகுமுறையும் அவரது செல்வாக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
சட்டப்பேரவையில் வெட்டு ஒன்று, துண்டு இரண்டாகத் தான் சொல்ல வேண்டிய கருத்தை நேரடியாகப் பேசுவது, தனிப்பட்ட அரசியல் விமர்சனங்களைத் தவிர்த்து மக்கள் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போன்ற அவரது அணுகுமுறை இளம் தலைமுறையினரையும் பெண்களையும் வெகுவாகக் கவர்ந்துள்ளதாக சமூக வலைதளங்களில் கருத்துகள் பதிவாகி வருகின்றன.
இன்னொரு பக்கம், பாமகவை நீண்ட காலமாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மையமாகக் கொண்ட கட்சி என்ற விமர்சனம் இருந்து வந்த நிலையில், சௌமியா அன்புமணியின் அரசியல் செயல்பாடுகள் அந்தப் பார்வையை மாற்றுவதற்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளதாகவும் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். ஒரு பெண் தலைவராகவும், மக்கள் பிரச்சனைகளை முன்வைக்கும் சட்டமன்ற உறுப்பினராகவும் அவர் முன்னிறுத்தப்படுவது, பாமகவின் அரசியல் அடையாளத்தை மாற்றும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில்தான், “அடுத்த முதல்வர் நீங்கள்தான் மேடம்” என்ற அளவுக்கு சௌமியா அன்புமணியை முன்னிறுத்தும் ஆதரவு குரல்கள் சமூக வலைதளங்களில் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. இந்த ஆதரவு வெறும் சமூக வலைதளப் பாராட்டுகளாகவே முடிந்துவிடுமா அல்லது எதிர்காலத்தில் உண்மையான அரசியல் ஆதரவாக மாறுமா என்பதே அடுத்தகட்ட கேள்வியாக உள்ளது.
ஒரு சட்டமன்ற உறுப்பினராக மக்கள் பிரச்சனைகளை தொடர்ந்து முன்வைத்து, சட்டப்பேரவையில் தனக்கென ஒரு அரசியல் அடையாளத்தை உருவாக்கி வரும் சௌமியா அன்புமணியின் செயல்பாடுகள், பாமகவையும் அடுத்தகட்ட அரசியல் பாதையை நோக்கி நகர்த்தக்கூடும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
சௌமியா அன்புமணியை வெறும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் அரசியல் பிரதிநிதியாக மட்டுமே பார்க்காமல், தமிழ்நாடு முழுவதும் அறியப்படும் பெண் அரசியல் தலைவராக மக்கள் பார்க்கத் தொடங்கியிருப்பது, தமிழக அரசியலில் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது. இந்த ஆதரவு அலை எந்த அளவுக்கு அரசியல் மாற்றமாக உருவெடுபோகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
English Summary
A wave of support is blowing in favor of Sowmya Anbumani